தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“சேவையே கடவுள்..” - விஜயின் அரசியல் குறித்து லாரன்ஸ் மாஸ்டர் கூறியது என்ன? - RAGHAVA LAWRENCE about Vijay - RAGHAVA LAWRENCE ABOUT VIJAY

Raghava Lawrence: மயிலாடுதுறையில் நடந்த டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகவா லாரன்ஸ் "நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததில் சந்தோஷம், மக்கள் விஜய் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். நான் சேவையே கடவுள் என வாழ்ந்து வருகிறேன்" எனத் தெரிவித்தார்.

நடிகர் விஜய் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் புகைப்படம்
நடிகர் விஜய் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் புகைப்படம் (Credits to ETV Bharat tamil nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 7, 2024, 4:04 PM IST

ராகவா லாரன்ஸ் டிராக்டர் வழங்கிய வீடியோ (Credits - ETV Bharat Tamilnadu)

மயிலாடுதுறை:நடிகர் ராகவா லாரன்ஸ், மாற்றம் என்ற அமைப்பின் மூலம் மே 1ஆம் தேதி முதல் சேவை செய்து வருகிறார். இந்த அறக்கட்டளை மூலமாக முதற்கட்டமாக ஏழை விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏழை விவசாயிகள் 10 பேருக்கு டிராக்டர் வழங்க முடிவெடுத்து, அதன்படி பல்வேறு மாவட்டங்களில் வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில், நான்காவது டிராக்டர் மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி கிராமத்தில் சதீஷ் என்ற விவசாயிக்கு இன்று (மே 7) வழங்கப்பட்டது. அப்போது, விவசாயி சதீஷ் என்பவருக்கு வழங்கிய ராகவா லாரன்ஸ், அந்த டிராக்டரை கிராமம் முழுவதும் உள்ள அனைத்து ஏழை விவசாயிகளும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

முன்னதாக ராகவா லாரன்ஸூக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து, அவரோடு சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டு, மேடைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேடையில் பேசிய ராகவா லாரன்ஸ், தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 10 டிராக்டர்கள் வழங்க உள்ளதாகவும், விரைவில் விதவைப் பெண்கள் 500 பேருக்கு தையல் இயந்திரங்கள் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ராகவா லாரன்ஸ், "விவசாயிகள் பல்வேறு இடங்களில் கடன் சுமையால் தற்கொலை செய்து கொள்வதாக வரும் செய்திகள் தனக்கு மிகுந்த வேதனையை அளித்தது. இதனைப் போக்கும் வகையில் விவசாயிகளுக்கான உபகரணங்கள் வழங்க முடிவு செய்து, மாநிலம் முழுவதும் வழங்கி வருகிறேன். மேலும், இங்கு வழங்கியுள்ள டிராக்டரை, அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அனைவரும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, இளையராஜா மற்றும் வைரமுத்து மோதல் பற்றிய கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்ட நிலையில், இந்த சேவை குறித்து ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

பின்னர், நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்குப் பதில் அளித்த ராகவா லாரன்ஸ், “நடிகர் விஜய் எதை செய்தாலும் அதைச் சரியாக செய்வார். அவர் அரசியலுக்கு வந்தது சந்தோஷம். மக்கள் நடிகர் விஜயிடம் அதிகம் நம்பிக்கை வைத்துள்ளனர். விஜயும் மக்களிடம் நம்பிக்கை வைத்து கட்சியை ஆரம்பித்திருக்கிறார். நண்பர் விஜய்க்கு எனது வாழ்த்துக்கள்” என்று தெரிவித்தார். அரசியலில் விஜயுடன் இணைந்து பயணிக்க வாய்ப்புள்ளதா எனக் கேட்டபோது, நான் சேவை செய்து கொண்டிருக்கிறேன். சேவையே கடவுள் எனத் தெரிவித்தார்.

தற்போது, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் தற்கொலை முயற்சி தொடர்பான கேள்விக்கு, “இரண்டு கால்கள் கைகள் இல்லாமல் மாற்றுத்திறனாளிகள் இருக்கிறார்கள். அவர்களே நிறைய முயற்சி எடுத்துச் செய்கிறார். தோல்வி என்பதெல்லாம் சின்ன விஷயம், இதையெல்லாம் படிக்கட்டாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "சவுக்கு சங்கரை பிளாஸ்டிக் பைப்பால் தாக்கிய போலீஸ்?" - வழக்கறிஞர் பகீர் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details