தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை.. கூடுதலாக 120 பேருந்துகள் இயக்கம்" - அமைச்சர் சிவசங்கர்! - kilambakkam bus stand

Minister Sivasankar: பயணிகள் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கூடுதலாக 120 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

சென்னை
சென்னை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 8:38 PM IST

"கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" - அமைச்சர் சிவசங்கர்!

சென்னை: சட்டமன்ற கூட்டத்தொடர் தற்பொழுது நடைபெற்று வரும் நிலையில், நேற்று (பிப்.14) எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் சிவசங்கர் ஆகியோர் சட்டமன்றத்தில் பதிலளித்தனர். இந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இன்று (பிப்.15) ஆய்வு மேற்கொண்டார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் தெரிவித்ததாவது, "கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து பல்வேறு வதந்திகள் உலா வருகிறது.

ஆனால் அவற்றை தவிர்ப்பதற்காக தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். நேற்று (பிப்.14) சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர், இதுகுறித்து கேள்வி எழுப்பினார். அப்போதே நானும், அமைச்சர் சேகர் பாபுவும் சில கருத்துகளை எடுத்துரைத்தோம். பெரிய பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் சிறிய பிரச்சனைகள் இருந்தால் அதை எதிர்க்கட்சித் தலைவர் உட்பட யார் கூறினாலும், சரி செய்வோம். தொடர்ந்து வாரம் ஒருமுறை நான் மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். சிறு பிரச்சனைகளையும் சரி செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு இயக்கப்படுகிற பேருந்துகள் எண்ணிக்கை, குறித்து பல்வேறு சந்தேகங்கள் உள்ளன.

குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட செய்தி பெரும் செய்தியாக, மாற்றப்பட்டு வருகிறது. அன்றைய தினம் மதுராந்தகம் அருகே விபத்து ஏற்பட்ட காரணமாக பேருந்துகள் காலதாமதமாக வந்தது. இதன் காரணத்தினால் தான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வழக்கமான பேருந்துகளைக் காட்டிலும் அன்று கூடுதலான பேருந்துகள் இயக்கப்பட்டது. எப்படி தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற நாட்களில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமோ, அதுபோல முகூர்த்த நாள் மட்டும் இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை ஆகியவற்றை கருத்தில், கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டன. வந்து சேர வேண்டிய பேருந்துகள் தாமதமானதால் அன்று அது போன்ற சூழல் ஏற்பட்டது.

இரவு 12 மணிக்கு மேல் பேருந்துகள் இயக்கப்படும் என சிலர் வந்து விடுகிறார்கள். திடீரென 200, 300 நபர்கள் பேருந்து நிலையத்திற்கு வந்து விட்டு பேருந்துகள் கிடைக்கவில்லை என்று கூறினால் அது எப்படி சாத்தியம் என தெரியவில்லை. பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்தில் தான் செல்லும் என்பது தமிழ்நாடு முழுவதும் உள்ள நடைமுறை.

குறிப்பிட்ட அட்டவணைப்படி பேருந்துகள் இயக்கப்படுகிறதா என்றால், அது இயக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. முக்கிய தினங்களில் திட்டமிடபடாத பேருந்துகளும் இயக்கப்படுகிறது. திடீரென பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்தால், ஓட்டுநர்கள் நடத்துனர்களுக்கு என்ன செய்வது.

இரவு 11 மணிக்கு மேலாக வாகனங்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைக்கப்பட்டு பெரிய அளவில் போக்குவரத்து இருக்காது. அதிகாலை நேரத்தில் பயணம் செய்வது என்பது ஆபத்தானது. விபத்துக்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் தான் அந்த நேரங்களில் பேருந்து போக்குவரத்து தவிர்க்கப்படுகிறது. எனவே பயணிகள் இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 361 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 734 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நாளை காலையில் இருந்து கூடுதலாக 120 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

1,215 பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு இயக்கப்பட உள்ளன. இனி வதந்திகளை பரப்ப வேண்டிய தேவையில்லை. 6 ஏடிஎம்கள் வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 50 கடைகள் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், தனியார் யூடியூப் சேனல் ஒன்று தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் தான் அந்த வீடியோவை பரப்பி இருக்கிறார்கள். வதந்தி பரவதற்காக திட்டமிட்டு செய்யப்பட்ட செயலாக உள்ளது. வதந்தி பரப்புவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு! டவுன்லோட் செய்வது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details