வேலூர்: ஏசிஎஸ் மருத்துவமனை சார்பில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஐந்து சட்டமன்றத் தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இன்று (பிப்.18) வேலூர் அருகே அரியூர் பகுதியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி நிறுவனத் தலைவரும், புதிய நீதிக் கட்சித் தலைவருமான ஏ.சி. சண்முகம் பங்கேற்று வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு வேலை வாய்ப்புக்கான ஆணைகளை
வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஏ.சி. சண்முகம், "வேலூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு வழங்குவதற்காக பல்வேறு நிறுவனங்கள் வரவழைக்கப்பட்டு வேலைவாய்ப்பு முகாம்கள்
நடத்தப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டு இதுவரை ஐந்து முகாம்களில் சுமார் 10,250 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை ஒரு அரசு செய்ய வேண்டியதைத் தனி நபராக ஏசிஎஸ் மருத்துவமனை செய்து வருகிறது" என்றார்.