சென்னை:காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில்மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்று கூறியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாற்றுத்திறனாளிகளுக்கான டிசம்பர் 3 இயக்கத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை இன்று (மே.12) சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக், “கடைக்கோடி மாற்றுத்திறனாளியின் வாழ்க்கை மேம்பட்டு வர வேண்டும் என்பதற்காக, காங்கிரஸ் இயக்கம் தங்களுடைய தேர்தல் அறிக்கையில் தங்களுக்கான திட்டங்களை முன்னிலைப்படுத்தி உள்ளது. பாஜக அரசு சக்கர நாற்காலி, மாற்றுத்திறனாளிகளின் உதவிப் பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரியை விதித்துள்ளது.
கிராம பஞ்சாயத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நடைப்பயணத்தின் போது ராகுல் காந்தியை சந்தித்து முன்வைத்தோம், காங்கிரசும் இந்த கோரிக்கையை ஏற்று தங்களுடைய தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு இருக்கிறார்கள், இதற்கு மாற்றுத்திறனாளிகளின் சார்பாக நன்றி”, என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “காங்கிரஸ் ஆட்சியில் தான் தூர்தர்ஷன் தொலைக் காட்சியில் முதன் முதலாகச் சைகை மூலமாகச் செய்திகளை வெளிப்படுத்தி, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டது. நாளை முதல் காங்கிரஸ் பேரியக்கத்தின் கட்டமைப்பை ஏற்றுவதற்காகவும் கட்டமைப்பு மாற்றி அமைப்பதற்காகவும் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறோம்.
மாவட்டம், வட்டாரம், நகரம், பேரூர், கிராம கமிட்டி நிர்வாகிகளைச் சந்தித்து கட்சியின் வளர்ச்சி பற்றி பேச உள்ளோம். மாற்றுத்திறனாளிகள் வைத்த கோரிக்கைகளைத் தமிழகச் சட்டமன்ற கூட்டத்தொடரில் முன்வைக்க காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தயாராக உள்ளோம்”, என்றார்.