சென்னை:பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இறந்துபோன பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய், சிவசக்தி உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆற்காடு சுரேஷ்:முன்னதாக, கடந்தாண்டு ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் ஆம்ஸ்ட்ராங் தான் இருக்கிறார் என கருதியே அவரை பழி தீர்த்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில், விசாரணையை துரிதப்படுத்தியுள்ள செம்பியம் போலீசார், கைது செய்யப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 11 பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல பணம்? இதையடுத்து, பரங்கிமலையில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய எவ்வளவு பணம் வாங்கப்பட்டது? யாருக்கெல்லாம் தொடர்பு என 11 பேரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வேறு யாரையாவது கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டதா எனவும் 11 பேரிடமும் தனித்தனியாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலி நம்பர் பிளேட்டுகள்: இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களில் பெரும்பாலானோர் ஆற்காடு சுரேஷின் உறவினர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு முன் 10 நாட்கள் நோட்டமிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், கொலை செய்வதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பே நிகழ்விடத்திற்கு வந்து கைது செய்யப்பட்டவர்கள் காத்திருந்துள்ளனர். போலி நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தி 5 இருசக்கர வாகனத்தில் வந்து கொலை செய்ததும் அம்பலமாகி உள்ளது.
நரம்பு பகுதிக்கு குறி: அதேநேரம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேரின் வங்கிப் பரிவர்த்தனைகள் ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக, ஆட்டோ ஓட்டுநர் திருமலையோடு சேர்ந்து பெரம்பூர் பகுதியில் உள்ள மதுபானக் கடையில் தனது கும்பலோடு மது அருந்தியபடியே எவ்வாறு ரூட் எடுப்பது என்பது குறித்து திட்டம் போட்டுள்ளனர். குறிப்பாக, ரத்தம் அதிகளவில் வெளியேறும் நரம்புப் பகுதிகளை குறிவைத்து வெட்டவும், மிஸ் ஆகக்கூடாது என ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு தனது கூட்டாளிகளிடம் தெரிவித்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக திருநின்றவூரைச் சேர்ந்த சதீஷ், நரேஷ், சீனிவாசன் ஆகிய மூன்று பேரை பிடித்து செம்பியம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் மூன்று பேரும் ஆற்காடு சுரேஷின் உறவினர்கள் என தெரியவந்துள்ளது.
திமுகவைச் சேர்ந்த அருள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர் செல்போனில் இருந்து கிடைக்கப் பெற்ற எண்களை வைத்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில், இந்த (சதீஷ், நரேஷ், சீனிவாசன்) மூன்று பேருக்கும் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:'போலீஸ் வர சொன்னதா கிளம்புனாரு'.. திருச்சி ரவுடி என்கவுண்டர் திட்டமிட்டதென உறவினர்கள் குற்றச்சாட்டு..!