சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த 2024 பொதுத்தேர்தலில் திமுக கூட்டணி 40 க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு கூட்டணி கட்சிகளும் பெரும் பங்காற்றியுள்ளன.
தொகுதி பங்கீடுகளில் அதிருப்தியை பெரிதாக காட்டிக்கொள்ளாமல் கூட்டணி வெற்றிக்காக கட்சிகள் தேர்தல் வெற்றியில் மட்டும் கவனம் செலுத்தியது திமுகவுக்கு பக்கபலமாக அமைந்தது.
லட்சியத்தில் உறுதி:தேர்தலுக்கு முன்பு விசிக சார்பில் ஒரு பொதுத் தொகுதி, 3 தனி தொகுதிகள் என 4 சீட்டுகள் கேட்கப்பட்டன. ஆனால் விசிகவுக்கு 2 தொகுதிகள் மட்டுமே திமுக ஒதுக்கியது. இதில் திருமாவளவன் திருப்தி அடையவில்லை என்றாலும் அதனை பெரிதாக காட்டிக்கொள்ளவில்லை. அப்போது பேசிய திருமாவளவன் '' மூன்று தொகுதிகளை கேட்டோம்.. கடந்த முறையை போல இரண்டுதான் ஒதுக்கப்பட்டுள்ளது. எல்லா சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டுதான் 2 தொகுதிகளில் போட்டி என்பதில் உடன்பட்டுள்ளோம்'' என்றார். அதாவது பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி ஒன்றுபட்டு இயங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் திருமாவளவன் காணப்பட்டார்.
மேலும், தேசிய அளவில் இதே நிலைப்பாட்டில் இருந்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா' கூட்டணியாக உருவெடுத்தன. தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, ஐயுஎம்எல் என சலசலப்பே இல்லாமல் தொகுதி பங்கீடுகள் முடிந்து கூட்டணி அமைந்தது. திமுக கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் இந்த தேர்தலில் திமுக கூட்டணி 46.9 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது.
அதிமுகவை பொறுத்தவரை தேமுதிக, புரட்சி பாரதம், எஸ்டிபி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது. தேர்தலுக்கு முன்பு அதிமுகவை விட்டு வெளியேறிய பாஜக, பாமக, தமாகா, அமமுக, தமமுக, ஓபிஎஸ் உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.
பாஜக கணிசமான எண்ணிக்கை: இந்நிலையில், அதிமுக - பாஜக பிளவு பாஜகவுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதை இந்த தேர்தல் தெளிவுபடுத்தியுள்ளது. மாறாக கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் நாம் தமிழர் வேட்பாளர்களை விடவும் அதிமுக பின் தங்கியுள்ளது. சில தொகுதிகளில் இரண்டாம் இடத்தில் உள்ள அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே உள்ள வாக்கு எண்ணிக்கையின் தூரமானது அதிமுகவுக்கு கலக்கத்தை தரும் வகையில் இருக்கிறது. குறிப்பாக, திமுக அதிக வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்ற தொகுதிகளில் பாஜக கணிசமான எண்ணிக்கையில் வாக்குகளை பெற்றுள்ளது..
அதிமுகவை முந்தும் பாஜக?: அதன்படி, கோவை தொகுதியில் திமுக 5 லட்சத்து 68 ஆயிரத்து வாக்குகளில் வெற்றி பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக பாஜக 4 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் அதிமுக 2 லட்சத்து 36 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. அதேபோல, நீலகிரி தொகுதியில் திமுக 4 லட்சத்து 73 ஆயிரம் வாக்குகளில் வெற்றி.. பாஜக 2 லட்சத்து 32 வாக்குகள்.. இதேபோல மதுரையிலும், புதுச்சேரியிலும், திருவள்ளூரிலும் பாஜக அதிமுகவை பின்தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சில இடங்களில் பாஜக மூன்றாவது இடத்தில் இருந்தாலும் அதிமுகவை முந்த பெரிய எண்ணிக்கை தேவையில்லாத நிலைதான்..
எனவே இந்த தேர்தல் தமிழக பாஜகவுக்கு வெற்றி தராமல் இருந்தாலும் அதிமுகவுக்கு தனது பலத்தை நிரூபித்துள்ளது பாஜக. மேலும், இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 23.05 சதவீத வாக்குகளும், பாஜக கூட்டணி 11.24% வாக்குகளும் பெற்றுள்ளன.
துரை வைகோ வருத்தம்:இதுகுறித்து நேற்றைய தினம் கருத்து தெரிவித்த மதிமுக துரை வைகோ '' தமிழ்நாட்டின் சில தொகுதிகளில் அதிமுக 3 மற்றும் 4-வது இடங்களை பெற்றுள்ளது எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது. நானும் ஒரு திராவிட இயக்கத்தை சார்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன், இது அதிமுகவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக சண்டை என்பது அண்ணன், தம்பி சண்டை போன்றது. இங்கு மதவாத சக்திகள் அரசியல் செய்ய இடம் தரக்கூடாது'' எனக் கூறினார்.
இதையும் படிங்க:'மற்றவை' இல்ல 'மூணாவது'... அதிமுகவை பின்தள்ளிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்!