திருப்பத்தூர்: நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. மேலும் அனைத்து அரசியல் கட்சிகளும் பிரச்சாரங்களை மும்மரமாக நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், வாணியம்பாடியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் பேசிய ஏ.சி.சண்முகம், வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் 4வது முறையாகப் போட்டியிடுகிறேன். கடந்த தேர்தல்களில் அதிமுக சார்பாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட போது, அதிமுகவின் முக்கிய பொறுப்பாளர் ஒருவர் திமுகவினருடன் கைகோர்த்துக் கொண்டு, தனது மாப்பிள்ளை வெற்றி பெற வேண்டுமென உள்ளடி வேலைகள் செய்து என்னைத் தோற்கடித்தார்கள்.
ஆகையால், அதிமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்குச் சென்றது. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. ஆனால், இப்போது நான் அவர்கள் முதுகில் குத்தியதாகக் கூறுகின்றனர். அதிமுகவினர் தான் என்னைப் பழிவாங்க, முதுகில் குத்தி கடந்த தேர்தலில் என்னைத் தோற்கடித்தார்கள். கடந்த 11 மாதங்களாகச் சிந்தித்து தற்போது நான் தெளிவாக உள்ளேன்.
வாணியம்பாடி மக்களால் வெற்றி பெற்ற திமுகவை, அதே வாணியம்பாடியில் வைத்து சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இது என் மானப்பிரச்சனை. என் முதுகில் குத்தியவர்களை நாம் மார்பில் குத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய ஏ.சி.சண்முகம், "ஒவ்வொரு முறையும் மோடி ஆசைப்படுகிறார், அவருடைய அமைச்சரவையில் நானும் இருக்க வேண்டும் என்று. ஆனால் மக்கள் அதைச் செய்யவில்லை. இஸ்லாமியர்கள் வாக்கு இந்த முறை கதிர் ஆனந்திற்கு எதிராக உள்ளது.
நான் தேர்தலில் வென்றால் இஸ்லாமியர்களையும், மோடியையும் ஒன்றாக்குவேன். திமுக ஆட்சியில் ஒரு சொட்டு சாராயம் இருக்காது என்று கூறினார்கள், ஆனால் 6 ஆயிரம் மதுக்கடைகள் அதிகமாகியுள்ளது. வருமானம், வருமானம்... வசூல், வசூல்.. என்று இருக்காதீர்கள் பிரதர்ஸ், கொஞ்சம் புண்ணியமும் பாருங்கள். நீங்கள் நடத்தும் கல்லூரியில் ஒரு சீட்டாவது இலவசமாகத் தருவீர்களா? திமுக பிரதர்ஸ். மோடி பிரதமராகுவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. நூறு ரூபாயிற்கு உழையுங்கள், நான் ஆயிரம் ரூபாயாகத் திருப்பி தருகிறேன்" எனத் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் பாமக, பாஜக, சமத்துவ மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'சமூக நீதி பேசும் திமுகவில் ஒரு சிறுபான்மையின வேட்பாளரையாவது காட்டுங்கள்' - நெல்லை முபாரக் - Lok Sabha Election 2024