தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காருக்குள் கஞ்சா குடோன்.. ஷாக்கான போலீஸ்.. நாகையில் பரபரப்பு சம்பவம்! - ganja hidden in car

Nagapattinam Ganja smuggling: நாகையில் கார்களில் ரகசிய அறைகள் அமைத்து கஞ்சா கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 3 சொகுசு கார், 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 4:57 PM IST

கஞ்சா மற்றும் கைதானவர்கள்
கஞ்சா மற்றும் கைதானவர்கள் (Credit - ETV Bharat Tamil Nadu)

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கீழையூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மேலப்பிடாகை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, வெளி மாவட்ட பதிவு எண் கொண்ட மூன்று சொகுசு கார்கள் தொடர்ச்சியாக வந்துள்ளன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த கார்களை மறித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது சீட் கவர், கார் கதவு, டிக்கி போன்ற காரின் உள்ளேயே பல ரகசிய அறைகளை அமைத்து அதில் கஞ்சா பொட்டலங்களை கடத்திச் சென்றது தெரிய வந்தது.

இதனையடுத்து, இந்த கடத்தலில் ஈடுபட்ட விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த தட்சணாமுர்த்தி, சிவமூர்த்தி, திருப்பூர் மாவட்டம் இடுவாய் பகுதியைச் சேர்ந்த மணிராஜ், புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடியைச் சேர்ந்த கௌதம் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ஒடிசா மாநிலத்தில் இருந்து கார் மூலமாக ரூ.50 லட்சம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்ததும், இதனை வேதாரண்யம் கொண்டு சென்று படகு மூலம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்திச் செல்ல இருந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து, அவர்களிடமிருந்து 200 கிலோ கஞ்சா, 3 சொகுசு கார்கள், விலை உயர்ந்த செல்போன்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் சொகுசு கார்களை கீழையூர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் நேரில் பார்வையிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், '' கடந்த ஓராண்டில் இதுவரை நாகை மாவட்டத்தில் மட்டும் இலங்கைக்கு கடத்த இருந்த 1200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது'' எனக் கூறினார். நாகையில் சொகுசு காரில் ரகசிய அறைகள் அமைத்து கஞ்சா கடத்திச் சென்றவர்களை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.16 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details