சென்னை: ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் குறைதீர் முகாமானது மாநகர காவல் ஆணையர் சங்கர் தலைமையில், திருமுல்லைவாயிலில் உள்ள காவலர் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு ஆணையரை நேரில் சந்தித்து தங்களது புகார் மனுக்களை வழங்கினர். அப்போது மனுக்களை பெற்ற ஆணையர், சம்பந்தப்பட்ட காவல்துறை பிரிவு அதிகாரிகளிடம் வழங்கி உடனடியாக நிவர்த்தி செய்ய உத்தரவிட்டார்.
பின்னர், நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநகர காவல் ஆணையர் சங்கர் கூறுகையில், காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடிக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டு தீவிரமாக மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், கடந்த 2 மாதத்தில் தொலைந்து போன 70 குழந்தைகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மீதம் உள்ள 20 காணாமல் போன குழந்தைகளின் வழக்குகளை விரைவாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.