சென்னை:அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 200 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக, ரூ.90.52 கோடி மதிப்பிலான 150 புதிய பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டது.
சென்னை, பல்லவன் சாலையில் உள்ள மத்திய பணிமனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அங்குள்ள பேருந்துக்குள் ஏறி, புதிதாக செய்யப்பட்டுள்ள வசதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது, "புதிய பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக பயணிக்கும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் சொகுசு பயணத்திற்காக முன்புற சஸ்பென்சன் (Air Suspension) வசதி செய்யப்பட்டுள்ளதோடு, மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளின் வசதிக்காக 50 பேருந்துகளில் கீழ் படுக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், படுக்கை இரண்டிற்கும் இடையே அதிகமான இடம் மற்றும் தடுப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இருக்கை மற்றும் படுக்கைக்கும் தனித்தனியாக சார்ஜிங் போர்ட்கள், மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், பயணிகளின் பாதுகாப்புக்காக ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் அபாய ஒலி எழுப்பி (SOS) அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கும் வண்ணம் ஒலிபெருக்கி அமைக்கப்பட்டுள்ளதாக " தெரிவித்தனர்.
குறிப்பாக, பயணிகளின் உடைமைகளை வைக்கவும், பார்சலுக்காவும் போதிய இடவசதி உள்ளது. காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையிலான பேருந்தின் எஞ்சின் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், தீயை முன்கூட்டியே அணைக்கும் வகையில் எஃப்டிஎஸ்எஸ் (FDSS) கருவி பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், மு.சண்முகம், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், போக்குவரத்துத்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:காளான் வளர்ப்பும் இனி வேளாண் தொழில்; அரசிதழில் அறிவித்த தமிழக அரசு!