சென்னை:நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 19 மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி விசைப்படகுகளில் கடலுக்குச் சென்று மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, அதிகாலை நேரத்தில் இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பலில் வந்து நாகப்பட்டினம், ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகுகள் மற்றும் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள், மீன்பிடி வலைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அதோடு, மீனவர்கள் 19 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்கள் மீது 'எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக' குற்றம் சாட்டி இலங்கைக்கு அழைத்துச் சென்று இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் ராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் பொய்யான குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர் என்று தமிழக மீனவர்கள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவசர கடிதம் எழுதி, கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை உடனே விடுவிப்பதோடு, அவர்கள் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.