சென்னை:துபாயில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா விமானத்தில் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், கடந்த டிசம்பர் 15ஆம் தேதி துபாயில் இருந்து வந்த அனைத்து விமானங்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து, பயணிகளை சோதனை செய்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த டிசம்பர் 15ஆம் தேதி அதிகாலையில் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியது. அதில் இறங்கி வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகளின் தனிப்படையினர் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது விமானத்தில் உள்ள அனைத்து பயணிகளும் இறங்கி சோதனை நடத்திய பின் அனுப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, சுங்கத்துறை அலுவலர்கள் விமான பயண சேவை ஊழியர்களை (Cabin crews) நிறுத்தி விசாரணை செய்தனர். அந்த விசாரணையின் போது அவர்களுள் ஆண் ஊழியர் ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை சுங்கத்துறை அலுவலர்கள் தனி அறைக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து, முழுமையாக சோதனை செய்தனர்.
தொடர்ந்து விசாரணை தொடர்பான செய்தி அறிக்கை ஒன்றை விமான நிலைய சுங்கத்துறையினர் வெளியிட்டனர். அதில், "சந்தேகத்தின் பேரில் விமான ஊழியர் ஒருவரை சோதனை செய்தோம். அப்போது, அவர் பேண்ட் பெல்ட் அணியும் பகுதியில் 4 தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தோம். இதையடுத்து, அவரிடமிருந்து சுமார் 1.28 கோடி மதிப்புடைய 1.728 கிலோகிராம் தங்கக் கட்டிகள், விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டது," என குறிப்பிட்டிருந்தனர்.
இதையும் படிங்க:புஷ்பா பட பாணியில் கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான கஞ்சா!
மேலும் இது குறித்து தகவல் தெரிவித்த சுங்கத்துறை அலுவலர் ஒருவர், "கடத்தல் தங்கத்துடன் பிடிக்கப்பட்ட ஊழியரை கைது செய்த தகவலை ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் அதே விமானத்தில் வந்த பயணி ஒருவர் இந்த தங்க கட்டிகளை விமான ஊழியரிடம் கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து, விமான ஊழியர் கொடுத்த தகவலின் பெயரில் குடியுரிமை சோதனை பிரிவில் நின்று கொண்டிருந்த அந்த பயணியையும், சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தோம். தொடர்ந்து, கடத்தல் பயணியையும், கடத்தலுக்கு துணை போன விமான ஊழியரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்," என்றார். இச்சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.