திருநெல்வேலி:2024 நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி 7 கட்டங்களாக இந்தியா முழுவதும் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுவதால், தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், குளறுபடி இன்றி தேர்தலை நடத்தி முடிக்க, தேர்தல் தேதி அறிவித்தது முதலே, தமிழகம் முழுவதும் பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழு மற்றும் வருமான வரித்துறையினர் தனித்தனி குழுக்களாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள், அரசியல் கட்சிகள் சார்பில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்படுவதை தவிர்க்கும் வகையில், கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி முழுவதும் தேர்தல் பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழு மற்றும் வருமான வரித்துறையிர் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதிகாரிகளின் இந்த சோதனையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற பணம், வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் பணம், தங்க நகை, பரிசு பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.