சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பவள விழா அரங்கில் நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்என்ரவி தலைமையில் நடைபெற்ற விழாவில் இணைவேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக ஒன்றிய அரசின் அணுசக்தி கழகத்தின் முன்னாள் தலைவர் பத்ம விபூஷன் அணில் ககோட்கர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை:சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 1 லட்சத்து 7ஆயிரத்து 821 நபர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அதில், நேரடியாக 1,031 மாணவர்களுக்கு பட்டங்களை ஆளுநர் ஆர்என்ரவி வழங்கினார். இதில் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்கள் 89 ஆயிரத்து 53 பேருக்கும், தொலைதூர கல்வி இயக்கத்தின் மூலம் 16,263 மாணவர்களும், பல்கலைக்கழக துறைகளில் 1,404 மாணவர்களும், முனைவர் பட்டப்படிப்பில் 70 மாணவர்கள் என மொத்தம் 1,07,821 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
இந்த பட்டமளிப்பு விழாவில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினரான மனோஜ் பாண்டியன், இந்திய அரசமைப்பு சட்ட பிரிவு 72ன் கீழ் கருணை மனு மீது குடியரசு தலைவருக்கு உள்ள அதிகாரம், பிரிவு 161ன் கீழ் ஆளுநருக்கு உள்ள அதிகாரம் குறித்த ஆய்விற்காக முனைவர் பட்டம் பெற்றார். அதேபோல ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி ஜாங்கிட் குற்றவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.