திருநெல்வேலி: திருநெல்வேலியைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனர் விக்னேஷ் அண்ணாமலை என்பவரின் மகன் (10) கவின் விக்னேஷ். இச்சிறுவன், தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெருவெள்ளம் ஏற்பட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
மழை, பெரு வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் உதவிக்கரம் நீட்டிய மனித நேயமிக்க செயல், மாணவனைப் பெரிதும் சிந்திக்க வைத்துள்ளது. இந்த நிலையில், இந்தச் சம்பவங்களை மனதில் வைத்து, மனித நேயம் வெல்லும் (Humanity wins) என்ற தலைப்பில் ஆங்கிலப் புத்தகம் ஒன்றை மாணவன் எழுதியுள்ளார்.
இந்த புத்தகம் முழுவதும் முடிவு பெற்ற நிலையில், புத்தகத்தை வெளியிட பெற்றோரிடம் விருப்பம் தெரிவித்த நிலையில், தற்போது திருநெல்வேலியில் நடந்து வரும் பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவில், சிறிவனின் புத்தகத்தை வெளியிடுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவில் மாணவன் கவின் விக்னேஷ் எழுதிய புத்தகம் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. புத்தகத்தை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு வெளியிட, நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி, ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் ரயில் சிக்கியபோது பணியில் இருந்த ரயில் நிலைய மேலாளர் ஜாபர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, “நாங்குநேரி பள்ளியில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று மாணவர்கள் கைதாகி, பிணையில் தற்போது இருக்கிறார்கள். அவர்களை இன்று நான் சந்தித்தேன் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்பது பற்றி அவர்களிடம் விவாதித்தேன்.