திருச்சி: திருச்சியில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட வயலூரில், G ZONE அபாகஸ் மாஸ்டர்ஸ் குழுமம் சார்பில் தமிழகம் முழுவதும் அபாகஸ் பயிற்சி பெற்ற 265 மாணவ, மாணவிகள் ஒன்று சேர்ந்து தங்களது கண்களைக் கட்டிக்கொண்டு 60 நிமிடத்தில், 600 கணக்குகளுக்கு மனக்கணிதம் மூலம் தீர்வுகாணும் உலக சாதனை நிகழ்ச்சி இன்று (ஆக.26) நடைபெற்றது.
இதுவரையிலும் இந்த சாதனை உலகில் எவராலும் நிகழ்த்தப்படாத நிலையில், செபி உலக சாதனை புத்தகம் மற்றும், அகில இந்திய உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற உள்ளது. சுமார் ஒரு மணி நேரம் கணிதத்தில் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் படிப்பில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திடவும், தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியும் என உறுதிப்பட தெரிவித்தனர்.
இது குறித்து அபாகஸ் மாஸ்டர் செல்வமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், "அபாகஸ் உலக சாதனை நிகழ்வில் தமிழகம் மட்டுமில்லாமல் பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்தும், வட இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் ஆன்லைன் மூலம் கலந்து கொண்டுள்ளனர்.
இன்றைக்கு இருக்கக்கூடிய தொழில்நுட்ப வளர்ச்சியில், கல்வித் தரமானது ஒவ்வொரு நாளும் முன்னேறி கொண்டுதான் உள்ளது. அன்றைய காலகட்டத்தில் உள்ள கல்வித் தரம் வேறு மாதிரியாகவும், இன்றைய காலகட்டத்தில் உள்ள கல்வித் தரம் வேறு மாதிரியாகவும் உள்ளது.