மதுரை:ராமநாதபுரத்தில், தற்காலிகமாக இயங்கி வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்வதற்காக போலியான நீட் மதிப்பெண் சான்றிதழுடன் வந்த இமாசலப் பிரதேசத்தை சேர்ந்த மாணவர் அபிஷேக் S/O மகேந்திர சிங் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரத்தில் தற்காலிகமாக இயங்கி வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாணவர் சேர்க்கைக்கு, நீட் மதிப்பெண் பட்டியலுடன் சந்தேகத்திற்குரிய ஒரு நபர் வந்திருப்பதாக கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க:"200 தொகுதிகளில் வெல்ல வேண்டும்" - 2026 க்கு டார்கெட் ஃபிக்ஸ் செய்த ஸ்டாலின்.
இது தொடர்பாக கேணிக்கரை போலீசார் அளித்த தகவலின்படி, "இமாசலப் பிரதேசத்தில் பிறந்து, ஹரியானா மாநிலத்தில் பள்ளி படிப்பை முடித்த அபிஷேக் (22) என்ற நபர் ஏற்கனவே நீட் தேர்வு எழுதி இரண்டு முறை தேர்வாகவில்லை. இந்த வருடம் மீண்டும் நீட் தேர்வு எழுதி 720க்கு 60 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேரும் நோக்கத்தோடு நீட் தேர்வு மையத்திலிருந்து தனக்கு கிடைக்கப் பெற்ற மதிப்பெண் பட்டியலை எடிட் செய்து தானே போலியான மதிப்பெண் பட்டியலை தயார் செய்துள்ளார்.
மேலும், தன் குடும்பத்தினரையும் ஏமாற்றி தன் தந்தையுடன் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்காக ராமநாதபுரம் வந்துள்ளார். இவ்வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட கேணிக்கரை போலீசார், அபிஷேக் மற்றும் அவரது தந்தை ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து அபிஷேக்கின் செல்போன் மற்றும் இ-மெயில் விவரங்களை தீவிரமாக ஆராய்ந்து, அபிஷேக் போலியாக மதிப்பெண் பட்டியல் உருவாக்கியதை உறுதி செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்," என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் FIR NO- 542, பிரிவுகள் 336(2), 336(3), 336(4) தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 பிரிவு எண் 73 மற்றும் 74 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் இரண்டாவது நீதிமன்றத்தில் மாணவர் அபிஷேக் ஆஜர் படுத்தப்பட்டு, தற்போது ராமநாதபுரம் மாவட்ட சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்