தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

" மனைவியுடன் சேர்த்து வையுங்க" - கோவில்பட்டியில் செல்ஃபோன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்!

கோவில்பட்டி அருகே குடும்பப் பிரச்சனையில் தன்னை மனைவியுடன் சேர்த்து வைக்கக் கோரி 130 அடி செல்ஃபோன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டவர் மீது ஏறியவரை காவலர்கள் சமாதானம் செய்யும் காட்சி
டவர் மீது ஏறியவரை காவலர்கள் சமாதானம் செய்யும் காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2024, 12:42 PM IST

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள கவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் மகாலிங்கம்(30). கொத்தனாராக வேலை செய்யும் இவர் மனைவி முத்துமாரி மற்றும் குழந்தைகளுடன் கீழவிளாத்திகுளத்தில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (அக்.6) இரவு கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சனை காரணமாக, நேற்று விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் 130' அடி உயரம் கொண்ட தனியார் செல்போன் டவரில் ஏறிய மகாலிங்கம், "தனக்கும் தனது மனைவிக்கும் பிரச்சனை. தனது மனைவியை என்னுடன் சேர்த்து வையுங்கள். இல்லையென்றால் கீழே குதித்துவிடுவேன் என்று சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக அலப்பறை செய்து வந்துள்ளார்.

அதையடுத்து போலீசார் மகாலிங்கத்தின் மனைவி மற்றும் குழந்தையை வரவழைத்து, மகாலிங்கத்தை டவரில் இருந்து கீழே இறங்கி வரச் சொல்லுமாறு மைக்கை கொடுத்துப் பேச செய்தனர். ஆனால், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பல முயற்சிகள் செய்தும், விடாப்பிடியாக மகாலிங்கம் "இறங்கி வரமாட்டேன், எனக்கு நம்பிக்கை இல்லை" என்று விரக்தியாகப் பேசிக்கொண்டே டவரின் மேலேயே அமர்ந்து கொண்டும், தொங்கிக் கொண்டும் அதிகாரிகள் மற்றும் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்துள்ளார்.

இதையும் படிங்க: சீர்காழி அருகே போலி பதிவு எண் கொண்ட காரில் வலம் வந்த கும்பல்.. சதி திட்டமா? கூலிப்படை? - போலீஸ் விசாரணை!

நீண்ட நேரமாக இறங்கி வரச் சொல்லியும் கேட்காததால் மகாலிங்கத்தின் மனைவி கோவத்தில் மகனை அங்கிருந்து கூட்டிச் சென்றுவிட்டார். அதைக் கண்ட மகாலிங்கம், அங்கிருந்த பெண் உதவியாளரிடம், "பாருங்கள் மேடம் எப்படி போறான்னு; எனக்கு அவளுக்கும் எந்த உறவுமில்லை என்று அவளிடம் எழுதி வாங்குங்கள், என்னுடைய குழந்தை எனக்கு மீட்டுத் தாருங்கள்; அப்படிச் செய்தால் தான் நான் இறங்கி வருவேன்" என்று கூறியதைக் கேட்ட போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

முதலில் தன் மனைவியுடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி டவரில் ஏறிய மகாலிங்கம், திடீரென்று ட்விஸ்ட் கொடுத்து தனக்கு மனைவி வேண்டாம், தன்னுடைய குழந்தைகள் மட்டும் வேண்டும் என்று பேசி போலீசாருக்கு கிட்டத்தட்ட 2 மணி நேரமாக டார்ச்சர் கொடுத்துள்ளார். தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளும் பொறுமையாக மகாலிங்கத்தின் பேச்சுக்கெல்லாம் சரி சரி... என பதிலளித்து அவரை இறங்க வைக்கும் முயற்சியில் முனைப்புடன் செயல்பட்டனர்.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தயார் நிலையிலிருந்தது. பின்னர், மகாலிங்கத்தின் உறவினர்கள் மற்றும் காவல்துறை, தீயணைப்பு வீரர்களின் நீண்ட நேரம் பேச்சுவார்த்தைக்குப் பலனாக செல்போன் டவரில் இருந்து மகாலிங்கம் கீழே இறங்கி வந்தார். உடனடியாக மகாலிங்கத்திற்கு குடிக்க தண்ணீர் கொடுத்து போலீசார் அவரை பத்திரமாகக் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details