சென்னை: சென்னை விமான நிலையத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்காக, வண்ண விளக்கு அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இருந்த தனியார் ஒப்பந்தக் கூலித் தொழிலாளி ஒருவர் சுமார் 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்து, உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி வியாழன் கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை விமான நிலையம் மற்றும் விமான நிலைய வளாகப் பகுதி முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்வதற்காக தனியார் ஒப்பந்ததாரரிடம் சென்னை விமான நிலைய நிர்வாகம் ஒப்பந்தப் பணியை விட்டுள்ளது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் வண்ண விளக்குகள் அலங்காரம் செய்யும் பணிகளில் தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று சென்னை விமான நிலையத்தின் டெர்மினல் 2 என்ற சென்னை சர்வதேச விமான முணையத்தின் இரண்டாவது தளத்தின் மேல் பகுதியில் வண்ண விளக்குகளை தொங்கவிடும் பணியில் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த செல்வம்(26) என்ற கூலித் தொழிலாளி ஈடுபட்டுக் கொண்டிருந்ததாக விமான நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: உ.பியில் தொழிலதிபரின் மனைவியைக் கொன்ற ஜிம் கோச்.. திடுக்கிடும் பின்னணி!
அப்போது, எதிர்பாராத விதமாக செல்வம் திடீரென தவறி சுமார் 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து, படுகாயம் அடைந்துள்ளார். அதையடுத்து, செல்வத்தை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று காலை வரை செல்வம் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சென்னை விமான நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இது போன்ற உயரமான கட்டடத்தில் பணியில் ஈடுபடும்போது, அந்த தொழிலாளர்கள் பாதுகாப்பு கவசமாக தலையில் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அதோடு உயரத்தில் அந்தரங்கத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் சேப்டி பெல்ட் அணிந்திருக்க வேண்டும் என்பது விதிமுறைகள். ஆனால், அதுபோன்ற சேப்டி பெல்ட், தலைக்கவசம் எதுவும் தொழிலாளி செல்வம் அணியவில்லை என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, பாதுகாப்பு ஏற்பாடுகளாக வலைகள் கட்டியிருக்கப்பட வேண்டும் என்றும் விதி முறைகள் உள்ளன. ஆனால், இது போன்ற எந்த விதிமுறையும் அமல்படுத்தாமல் சென்னை விமான நிலையத்தில் இதைப் போன்ற பணிகளைச் செய்ய எவ்வாறு அனுமதிக்கப்பட்டனர் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்