தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தவெக தொண்டர்கள் இருவர் பலி..! சென்னையில் இருந்து மாநாட்டிற்கு செல்லும் வழியில் நேர்ந்த சோகம்..!

சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்திலும், ரயிலும் மாநாட்டுக்கு சென்ற இருவர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்துக்குளான வாகனம், தவெக மாநாடு
விபத்துக்குளான வாகனம், தவெக மாநாடு (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2024, 10:39 AM IST

Updated : Oct 27, 2024, 12:25 PM IST

சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று (அக்.27) விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது. மாலை தொடங்க உள்ள இந்த விழாவில் விஜய் பங்கேற்று உரை நிகழ்த்த உள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரட்டு வருகின்றனர்.

மாநாடு நடக்க இன்னும் சிலமணி நேரங்கள் இருக்கும் நிலையில், வி. சாலையில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் குவிய தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், விஜய் மாநாட்டை காண சென்னையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் புறப்பட்ட இளைஞர் சாலை விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனாம்பேட்டை அருகே தொண்டர் பலி:சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் பகுதியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் இளைஞர்கள் இருவர் தேனாம்பேட்டை டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது, எதிர்திசையில் எம் சாண்ட் மணலுடன் லாரி ஒன்று வந்துள்ளது. டிஎம்எஸ் ரயில் நிலையம் அருகே திரும்பியபோது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'விஜயின் நடவடிக்கைகள் அரசியலில் வேற மாதிரி இருக்கும்' - உறுதியாக சொல்லும் தாடி பாலாஜி

இந்த விபத்தில் லாரியின் பின் சக்கரம் இருசக்கரம் மீது மோதி ஏற்படுத்திய விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக, விபத்தில் சிக்கிய இரண்டு இளைஞர்களும், தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றதாகவும், இரு இளைஞர்களும் தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், உயிரிழந்த நபரின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீட்கப்பட்ட நபர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரயிலில் வந்த தொண்டர் பலி:சென்னையில் இருந்து தவெக மாநாட்டிற்கு சென்ற நிதிஷ் குமார் என்பவர் ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளார். தவெக மாநாட்டில் பங்கேற்பதற்காக ரயிலில் வந்து கொண்டிருந்த 2 பேர் விக்கிரவாண்டி தாண்டியதும் ரயிலிலிருந்து குதித்தனர். இதில் படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

போலீசாரின் விசாரணையில் மாநாட்டு பந்தலில் மின் விளக்குகளை பார்த்ததும் உற்சாக மிகுதியில் அவர்கள் ஓடும் ரயிலில் இருந்து குதித்தது தெரியவந்துள்ளது. இதேபோல நன்மங்கலத்தில் இருந்து தவெக மாநாட்டுக்குச் சென்ற வேன் சேலையூர் சந்தோசபுரம் அருகே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக 11 பேர் உயிர் தப்பினர். ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் தலைகவசம் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்த வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தி இருந்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Oct 27, 2024, 12:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details