தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், மஞ்சநீர்க்காயல் வடக்கு தெருவைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணனின் மகன் ஹரிகரன் (23). இவர் தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை தொழிற்சாலையில் பராமரிப்பு பணி நடைபெற்று வந்தது. அதில், அமோனியா பைப்லைனில் ஏற்பட்ட கசிவை சரி செய்யும் பணியில் ஹரிஹரன், தன்ராஜ், மாரிமுத்து, விஷ்ணு, ஹரி பாஸ்கர் ஆகிய ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென அம்மோனியா வாயு அதிக அளவு கசிந்ததால் ஏற்பட்ட விபத்தில் ஹரிகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தனராஜ், மாரிமுத்து, விஷ்ணு, ஹரி பாஸ்கர் ஆகியோர் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.
பின்னர், ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டு ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். இச்சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இத்தகவலறிந்து உடனடியாக தொழிற்சாலைக்கு வந்த மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் மற்றும் தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் கேல்கர் சுப்பிரமணியம் ஆகியோர், ஆலைக்குள் சென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இந்த விபத்தில் உயிரிழந்த ஹரிஹரன் உடல், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 50 ஆண்டுகள் பழமையான இந்த தொழிற்சாலையில் ஏற்கனவே பல்வேறு விபத்துக்கள் நடைபெற்றன.
ஆனால், முறையாக பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் நிர்வாகம் கையாளவில்லை. மேலும், எவ்வித அனுபவம் இல்லாத ஒப்பந்த ஊழியரான ஹரிஹரனை பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்காமல் ஆலை நிர்வாகம் அம்மோனியா வாயுக்கசிவை சரி செய்ய அனுப்பி உள்ளது.