செங்கல்பட்டு:திருப்போரூர் அருகே சுமார் இரண்டு தலைமுறையாக வசித்து வரும் வீட்டை, அதே பகுதியைச் சேர்ந்த நபர் முன்பகை காரணமாக, போலிப்பத்திரம் தயார் செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த வீட்டை வருவாய்த்துறையினர் இடிக்க முயற்சி செய்த போது, "எங்களது வீட்டை இடிக்கக் கூடாது" என 17 வயது சிறுவன் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே தண்டலம் கிராமத்தில் வசித்து வருபவர் குணசேகரன். இவருக்கு ரேணுகா என்ற பெண்ணுடன் திருமணமாகி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். தற்போது, ரேணுகா அவரது வீட்டிலேயே சுய தொழில் ஒன்றை செய்து வருகிறார். அதாவது, பெண்கள் சுய உதவிக் குழு மூலம் அரசு வங்கிக் கடன் பெற்று, வீட்டிலேயே சிறு தொழில் ஒன்றைச் செய்து வருவதாகவும், அதில் 40க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இவர்கள் பட்டா நிலத்திற்கு அருகே உள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி, அதில் குணசேகரனின் குடும்பம், கணவரை இழந்த குணசேகரனின் அக்கா, குணசேகரின் மாமனார், மாமியார் உள்ளிட்ட அனைவரும் பூர்வீகமாக வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், குணசேகரனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ருக்மானந்தம் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதனால், பழி வாங்கும் நோக்கத்தோடு ருக்மானந்தன் குணசேகரன் வீட்டைப் போலியாக ஆவணம் தயாரித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் தீர்ப்பில், வீட்டை இடிக்க நீதிமன்றமும் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி, திருப்போரூர் வருவாய்த்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் குணசேகரன் வீட்டை இடிக்க நேற்று (பிப்.21) வந்துள்ளனர். அப்போது, வீட்டின் சுற்றுச் சுவர்கள் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டத்தைத் தொடர்ந்து, வீட்டையும் இடிக்க முற்பட்டுள்ளனர். அப்போது, குணசேகரனின் 17 வயது மகன் மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தண்ணீரை ஊற்றித் தடுத்துள்ளனர். ஆனால், அந்த கலவரத்தில் குணசேகரனின் மனைவியும் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் மற்றும் சிறு தொழில் செய்து வரும் பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும், திருப்போரூர் வருவாய்த் துறையினர் மற்றும் வட்டாட்சியரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், பொதுமக்களுக்கும் வருவாய்த் துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியுள்ளது. ஆகையால், வீட்டை இடிக்கும் பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டு, வருவாய்த்துறையினர் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.