கோயம்புத்தூர்:கோவை மாவட்டம், வால்பாறை அருகே ரொட்டிக்கடை லோயர் பாரளை பகுதியில் தனியார் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான தொழிலாளர் குடியிருப்பை சேர்ந்தவர் சரோஜினி (72). இவர் பணி ஓய்வு பெற்று கோவையில் உள்ள மகன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், பொங்கல் தினத்திற்கு வால்பாறைக்கு பென்ஷன் பணம் வாங்க வந்த சரோஜினி தொழிலாளர் குடியிருப்பில் தனியாக தங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று ரத்த வெள்ளத்தில், துணிகள் விலகிய நிலையில் சரோஜினி சடலமாக இருந்துள்ளார். இதுகுறித்து வால்பாறை காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தகுமார், சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்க ஆரம்பித்தனர்.
தொடர்ந்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையில், துணைக் கண்காணிப்பாளர்கள் கிருஷ்ணா, ஸ்ரீநிதி, ஆய்வாளர்கள் ஆனந்தகுமார் தாமோதரன், சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.