தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வரதட்சணை கொடுமை.. திருமணமான ஆறே மாதத்தில் பெண் எடுத்த விபரீத முடிவு.. வெளியான பகீர் ஆடியோ! - WOMEN SUICIDE FOR DOWRY ISSUE

குமரி மாவட்டத்தில் மாமியாரின் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல், பெற்றோருக்கு ஆடியோ அனுப்பி வைத்து விட்டு, திருமணமான 6 மாதத்தில் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kanyakumari suicide  வரதட்சணை கொடுமை  Woman died for Dowry cruel  Suicide
தற்கொலை செய்து கொண்ட பெண் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2024, 11:38 AM IST

Updated : Oct 24, 2024, 1:12 PM IST

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கணவரின் வீட்டை விட்டு மருமகளை விரட்ட மாமியார் செய்த செயலால், திருமணமாகி ஆறு மாதமே ஆன நிலையில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டு, "தனது உடலைக் கூட கணவர் வீட்டில் கொடுக்கக் கூடாது" எனப் பேசிய உருக்கமான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கைது நடவடிக்கைக்குப் பயந்து மாமியாரும் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம், சுசீந்திரம் தெற்கு மண் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (25). இவர் கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கடந்த மார்ச் 21ஆம் தேதி இவருக்கும், கோயம்புத்தூர் மாவட்டம் கோவில்பாளையத்தைச் சேர்ந்த மின்வாரிய மேற்பார்வையாளர் பாவுவின் மகள் சுருதி (24) என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது.

அப்போது, பெண் வீட்டார் சார்பில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். அதைத் தொடர்ந்து, சுசீந்திரம் பகுதியில் இருவரும் வாழ்ந்து வந்த நிலையில், அவர்களுடன் கார்த்திக்கின் தாய் செண்பகவள்ளியும் (48) வசித்து வந்துள்ளார். ஆரம்பத்தில் எந்த பிரச்னையும் இல்லாமல் சென்ற நிலையில், 3 மாதத்திற்குப் பிறகு மாமியார் தரப்பில் வரதட்சணை கொடுமை மற்றும் சித்ரவதை செய்யத் துவங்கியதாக சுருதியின் பெற்றோர் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

வரதட்சணை கொடுமையால் தற்கொலை?: இந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்னர் தனது மாமியாரின் செயல் குறித்து வாட்ஸ்அப் மூலமாக, சுருதி தனது தாயாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சுருதியின் குடும்பத்தினர் மகளைக் காண வந்து கொண்டிருந்தபோது, கார்த்திக்கின் உறவினர் ஒருவர் சுருதியின் தந்தை பாவுக்கு தொடர்பு கொண்டு, உங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது உடல் நாகர்கோவில் அடுத்த ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதைக் கேட்டு மேலும் அதிர்ச்சியடைந்த சுருதியின் பெற்றோர் விரைந்து வந்து, தனது மகளை மாமியார் வரதட்சணை கொடுமை செய்து கொன்று விட்டதாகவும், "இது தற்கொலை அல்ல கொலை" என்றும், சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, திருமணமாகி ஆறு மாதமே ஆன நிலையில், பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

"உடலைக் கூட கணவர் வீட்டில் தராதீங்க": இந்நிலையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னால் சுருதி தனது தாய்க்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த ஆடியோவில், "எனது கணவர் நல்லவர். ஆனால், அவரது தாய் என்னை மிகவும் கொடுமைப்படுத்துகிறார். தன்னைக் கணவருடன் சேர்ந்து இருக்கவிடாமல் திட்டிக் கொண்டே உள்ளார். அவரது அருகில் இருந்தாலும், உணவு அருந்தினாலும் கூட அது பிடிக்காமல் என்ன கொடுமைப்படுத்தி வருகிறார்.

தற்கொலை செய்து கொண்ட பெண் பேசும் ஆடியோ, பெண்ணின் தந்தை பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

எனது கணவருடன் சேர்ந்து வாழக்கூடாது எனவும், வீட்டை விட்டு வெளியே போகுமாறும் வற்புறுத்துகிறார். ஆனால், என்னால் வாழாவெட்டியாக அம்மா வீட்டில் இருக்க முடியாது. மேலும், தனது நகைகள் அனைத்தும் எதில் உள்ளது எனவும், சகோதரியை நல்ல படியாக பார்த்துக் கொள்ளவும் எனவும் கூறி, நகை அனைத்தையும் கணவரிடம் பெற்றுக் கொள்ளவும் எனக் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, தனது இறப்பிற்கு பிறகு உடலை கணவர் வீட்டு கலாச்சாரத்தில் எந்த சடங்கும் செய்ய கொடுக்கக் கூடாது. இவர்கள் கலாச்சாரம் தேவையில்லை. நம் வீட்டிற்கே என்னைக் கொண்டு செல்லுங்கள்" என உருக்கமாக பேசியுள்ளார்.

"இது தற்கொலை அல்ல கொலை": இதுகுறித்து சுருதியின் தந்தை பாபு கூறுகையில், “கடந்த 6 மாதத்திற்கு முன்னர் திருமண தகவல் மையம் மூலமாக அவரது மகனுக்கு திருமணம் செய்ய கேட்டனர். அதனைத் தொடர்ந்து, முறைப்படை திருமணம் நடந்தது. அப்போது, 45 சவரன் தங்க நகைகள், 5 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை வரதட்சனையாக கொடுத்தோம்.

அதனைத் தொடர்ந்து, சில மாதங்களிலேயே நகை மாற்று குறைவாக உள்ளதாக எனது உறவினர்கள் கூறுகிறார் எனக்கூறி மகளை கொடுமை செய்து வந்துள்ளார். திருமணத்துக்கு முன் எனது மகள் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றினார். நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என நினைத்து தான் திருமணம் செய்து கொடுத்தோம். டார்ச்சர் செய்து கொலை செய்துவிட்டனர்.

வீட்டை விட்டு வெளியே போகவில்லை என்றால் நான் செத்துவிடுவேன் என மாமியார் மிரட்டியுள்ளனர். அதனால் மனமுடைந்து வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதனைக் கண்டு விரைந்து வரும் வழியில் போன் செய்து கொண்டே வந்தோம், ஆனால் யாருமே எடுக்கவில்லை. அதன்பிறகு சுருதி தற்கொலை செய்து இறந்துவிட்டதாக தகவல் வந்தது. தற்போது தங்கள் மகளின் இறப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

மாமியார் தற்கொலை: தற்போது சுருதி பேசும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆர்டிஓ காளீஸ்வரி சுருதியின் கணவர், மாமியாரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியுள்ளார். தொடர்ந்து, ஆர்டிஓ விசாரணை அறிக்கை வந்தபின் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்த நிலையில், நேற்று மதியம் மாமியார் செண்பகவள்ளி வீட்டில் தற்கொலை முயற்சி செய்துள்ளார். அதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு, ஆசாரிப்பாளையம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

தற்கொலை தவிர்ப்பு அழைக்க 104 (Credits - ETV Bharat Tamil Nadu)

தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆர்டிஓ அறிக்கை வெளியானால் எங்கு போலீசார் கைது செய்து விடுவார்களோ? என்ற அச்சத்தில் செண்பகவள்ளி தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. மருமகள் தற்கொலை செய்து உயிரிழந்த 2 நாளில் மாமியாரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Oct 24, 2024, 1:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details