சென்னை: நங்கநல்லூர் ஆசிரியர் காலனியில் வசித்து வருபவர் டில்லி பாபு. இவருடைய மனைவி அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இருவரும் வேலைக்குச் செல்வதால் வீட்டைக் கவனித்துக் கொள்வதற்காக அதே பகுதியைச் சேர்ந்த பரிமளா (30) என்பவரை வீட்டு வேலைக்கு வைத்துள்ளனர்.
இருவரும் வேலைக்குச் செல்லும் பொழுது வீட்டுச் சாவியைக் கீழ் வீட்டில் கொடுத்து விட்டு பரிமளா வந்தவுடன் சாவியைக் கொடுக்கும் படி கூறிவிட்டுச் செல்வதாகக் கூறப்படுகிறது. பின்னர், கடந்த பத்து நாட்களுக்கு முன்பு டில்லி பாபு மற்றும் அவரது மனைவி இருவரும் திருமண நிகழ்ச்சி செல்வதற்காகப் பீரோவில் வைத்திருந்த நகைகளை எடுத்த போது 10 சவரன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.
நகைகள் காணாமல் போனது குறித்து பரிமளாவிடம் கேட்ட போது எனக்கு எதுவும் தெரியாது எனக் கூறியுள்ளார். அதை நம்பி வீட்டில், அனைத்து பகுதிகளிலும் காணாமல் போன நகைகளைத் தேடி உள்ளனர் . வீட்டின் வறுமைக்காக வேலைக்கு நடந்து வந்த பரிமளா, திடீரென புதிய பைக், விலையுயர்ந்த புதிய செல்போன் என வாங்கி பந்தாவாக வரத் தொடங்கி உள்ளார். உடனே பரிமளா மீது சந்தேகம் அடைந்த டில்லி பாபு நகைகள் காணாமல் போனது குறித்து பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.