நீலகிரியில் பிறந்து 15 நாட்களே ஆன கைக்குழந்தையுடன் வாக்களித்த பெண்! நீலகிரி: நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில், காலை 7 மணி மமுதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது. ஒரிரு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகி நின்றாலும், உடனடியாக சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவுகள் நடைபெற்றன.
சிக்கள்ளி என்ற வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இளம்பெண்கள் முதல் முதியோர் வரை நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
இதில் சத்தியமங்கலத்தில் இருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ள புளியம்கோம்பை கிராமத்தைச் சேர்ந்த பெளதா, பிறந்து 15 நாட்களே ஆன தனது குழந்தையுடன் வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தார். அவருக்கு முன்னுரிமை அளித்து வாக்களிக்க தேர்தல் அலுவலர்கள் ஏற்பாடு செய்தனர்.
பின்னர் பெளதா கூறுகையில், “அரசு வாக்களிக்க வேண்டும் என முனைப்புடன் இருக்கும்போது கைக்குழந்தையுள்ள நான் வாக்களிப்பதன் மூலம் மற்றவர்கள் வாக்களிக்கப்பார்கள் என்பது எனது நோக்கம்" எனத் தெரிவித்தார். மேலும், இதேபோல் கிருஷ்ணவேணி என்ற பெண்ணும், ஒன்றரை வயது குழந்தையுடன் வந்து வாக்களித்து ஜனநாயகக் கடமையை ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"நாட்டைக் காப்பாற்றுவதற்கான தேர்தல் என மக்கள் நினைக்கிறார்கள்" - கனிமொழி பேட்டி! - Lok Sabha Election 2024