சென்னை:ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களின் எல்லையில் பேரம்பாக்கம் அருகே தொடங்கும் கூவம் ஆறானது சென்னை தீவுத்திடல் அருகே கடலில் கலக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் வரை தூய்மையான ஆறாகவும் விவசாயத்திற்குப் பயன்படும் நீராகவும் ஓடிவரும் கூவம், அதன் பின்னர் சென்னைக்குள் நுழைந்தவுடன் கருப்பு நிறத்தில் சாக்கடையாக மாறிவிடுகிறது.
இதனைத் தடுக்க தமிழக அரசு பல ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களை ஆயிரக்கணக்கான கோடிகளில் செலவிட்டு மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் சாக்கடையாக இருக்கும் கூவம் ஆறு இன்றுவரை மாறவில்லை. இந்நிலையில் கூவம் ஆறு சாக்கடையாக இருக்க முக்கிய காரணங்களில் ஒன்று இதுதான் என சென்னையைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் செப்டிக் டேங்குகளில் இருந்து எடுக்கப்படும் மலக்கழிவுகள் நேரடியாக கூவம், கால்வாயில் லாரிகளில் இருந்து கலக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அதற்கான வீடியோ ஆதாரத்தையும் லாரியின் பதிவெண்ணுடன் அவர் வெளியிட்டுள்ளார்.