தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தயார் நிலையில் புதிய பாம்பன் ரயில் பாலம்" - சிறப்பம்சங்கள் என்ன? - PAMBAN NEW RAILWAY BRIDGE

புதிய பாம்பன் பாலத்தில் தற்போதுள்ள அனைத்து அம்சங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு மண்டபத்திலிருந்து ராமேஸ்வரம் வரை வேகமாக ரயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது என்று மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.

புதிய பாம்பன் ரயில் பாலம்
மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா மற்றும் புதிய பாம்பன் ரயில் பாலம் (Credits - ETV Bharat Tamil Nadu and Southern Railway)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 14, 2024, 5:01 PM IST

ராமநாதபுரம்:ராமநாதபுரம்: இந்திய ரயில்வேயின் பொறியியல் அதிசயமாக தலை நிமிர்ந்து நிற்கும் பாம்பன் புதிய ரயில் பாலம், ராமேஸ்வரம் தீவை இந்தியன் மெயின் லேண்ட் உடன் இணைக்கும் வகையில் மிகப் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடல் வழியே கடந்து செல்லும் கப்பல்கள் தடையின்றி செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள vertical lift bridge 17 மீ உயரத்திற்கு செல்லும் வகையில் இந்தியாவிலேயே முதல் முறையாக நடுக்கடலில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலிருந்து ராமேஸ்வரம் செல்ல ரூ.550 கோடி செலவில் புதிய ரயில் பாலம் பாம்பன் கடலில் அமைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் பாலத்தின் நடுவே கப்பல் போக்குவரத்திற்காக அமைக்கப்பட்டுள்ள vertical lift bridge ல் ரயிலை ஓடவிட்டு பரிசோதனைகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ரயில்வே தென் மண்டல பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி நேற்று (நவ.13) தனது ஆய்வை தொடங்கி, இரண்டாம் நாளாக இன்றும் (நவ.14) ஆய்வுகளை மேற்கொண்டார். நேற்றைய ஆய்வின்போது பாலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து சென்று, அதன் கட்டுமான தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக, இன்று (நவம்.14) பாம்பன் பாலத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள லிஃப்டிங் அமைப்பை ஆய்வு செய்தார். மேலும், மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை அதிவேகமாக ரயில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது.

இந்த ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா கூறுகையில், "புதிய பாம்பன் ரயில் பாலத்தில் அடித்தள கட்டுமானத்தை ஆய்வு செய்தோம். மேலும் லிஃப்டிங் அமைப்பை ஏற்றி இறக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டதோடு பாலத்தில் தற்போதுள்ள அனைத்து அம்சங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது.

அதேபோன்று மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை சுமார் 90 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இடைப்பட்ட தூரத்தை 15 நிமிடத்தில் ரயில் கடந்துள்ளது. தற்போது கைவிடப்பட்டுள்ள பழைய பாம்பன் ரயில் பாலம் மிகவும் வலுவிழந்து காணப்படுவதால் போக்குவரத்துக்கு தகுதியற்றதாகிவிட்டது. அதனை தேசிய நினைவுச் சின்னமாக ஆக்குவது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்" என்று தெரிவித்தார்.

பாம்பன் பாலத்தின் வரலாறு: இந்திய விடுதலைக்கு முன்பு சேதுபதி மன்னர்கள் காலம் வரை ராமேஸ்வரம் தீவுக்கு செல்ல மண்டபத்திலிருந்து கடல் வழியாக பக்தர்கள் படகை பயன்படுத்தி சென்று வந்தனர். ஆங்கிலேயர் ஆட்சியின்போது 110 ஆண்டுகளுக்கு முன்பு 1911 ம் ஆண்டு மண்டபம் - ராமேஸ்வரத்தை இணைக்கும் வகையில் ரயில் பாலம் உருவாக்கப்பட்டது. இந்தப் பாலத்தின் வழியே நடைபெற்ற போக்குவரத்தின் வாயிலாக சுற்றுலாப் பயணிகளின் வருகையின் மூலம் ராமேஸ்வரம் தீவு பெருமளவு வளர்ச்சி காணத் தொடங்கியது. அதற்குப் பிறகு சாலைப் போக்குவரத்திற்காக பாம்பனில் பாலம் கட்டப்பட்டு கடந்த 1988-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. சாலைப் போக்குவரத்திற்காக தனிப் பாலம் உருவாக்கப்பட்டாலும், கடலின் நடுவே ரயிலில் பயணிக்கும் அனுபவம் என்பது சுற்றுலாப்பயணிகளுக்கு நல்ல அனுபவம் தரக்கூடியது என்பதால், ரயில் பயணமும் வெகு சிறப்பாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நூற்றாண்டுகளைக் கடந்த ரயில் பாலம் கடல் காற்றின் காரணமாக அடிக்கடி துருப்பிடித்து பழுதடைவதும், அதற்கான பராமரிப்புச் செலவுகள் அதிகரிப்பதும் என பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வந்தது.

ரயில் பாலத்தின் நடுவே கப்பல் போக்குவரத்தை அனுமதிக்கும் வகையில் உள்ள சேர்ந்து விரியும் அமைப்பில் , அவ்வப்போது பழுது நேர்வதால் பாலத்தின் அன்றாட செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் சுமார் 2 கி.மீ. நீளமுள்ள இந்தப் பாலத்தில் நிரந்தர வேகக்கட்டுப்பாட்டுக் கருவி உள்ளதால் ரயில்களை 10 கி.மீ. வேகத்தில்தான் இயக்க முடியும்.இந்திய ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த பாலத்தை தொடர்ந்து பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும் என கருத்து தெரிவித்திருந்தனர். இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டு புதிய ரயில் பாலத்தைக் கட்ட இந்திய ரயில்வே துறை முடிவு செய்து இதற்கான பணிகளைத் துவங்க கடந்த 2019-ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. பாம்பன் புதிய பாலத்திற்கான பணிகள் முழுவதும் நிறைவடையும்போது ரூ.550 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது.

எனவே பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய புதிய பாம்பன் பாலம் கட்ட ரயில்வே வாரியம் முடிவு செய்தது. சுமார் 2.8 கி.மீ. நீளமுள்ள புதிய கடல் பாலத்தின் நடுவே பெரிய கப்பல்கள் சென்று வரும் வகையில் பாலத்தின் நடுவே 72.5 மீட்டர் உயரம் கொண்ட லிஃப்டிங் கிர்டர் செங்குத்தாக மின் இயந்திரவியல் சக்தி மூலம் திறந்து கப்பல்களுக்கு வழிவிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பழைய பாலத்தில் இருபுறமும் ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் மனித ஆற்றல் மூலம் திறக்கப்படும் என்பது முக்கியமானது.

இந்த புதிய பாலம் செங்குத்தாக உயர்த்தி திறக்கப்படும் இந்தியாவின் முதல் பாலமாக அமைய இருக்கிறது. பெரிய கப்பல்கள் சென்று வரும் வகையில் நடுவில் உள்ள லிப்டிங் கிர்டர் 17 மீட்டர் உயரத்திற்கு மேலே செல்லும். இது அருகிலுள்ள வாகன போக்குவரத்து பாலத்திற்கு இணையான உயரம் ஆகும்.

லக்னோ ரயில் ஆராய்ச்சி வடிவமைப்பு தர நிர்ணய அமைப்பின் ஆலோசனையின் பேரில் பாலத்தின் கிர்டர்களை வடிவமைக்கும் பணி பாம்பனில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சத்திரக்குடி ரயில் நிலையத்தில் நடைபெற்றது. அங்கிருந்து வடிவமைத்துக் கொண்டு வரப்பட்ட கிர்டர்கள் மற்றும் லிஃப்டிங் ஸ்பேன் ஆகியவை பாலத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

கடலில் 333 காங்கிரிட் அடித்தளங்கள், 101 காங்கிரிட் தூண்கள் ஆகியவை நிர்மாணிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத் தேவையை கருத்தில் கொண்டு இரட்டை ரயில் பாதை அமைக்கும் வகையில் அடித்தளமும் தூண்களும் அகலமாக அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போதைய தேவையை கருத்தில் கொண்டு ஒரு ரயில் பாதை மட்டுமே அமைக்கப்படுகிறது.

இந்த புதிய பாம்பன் பாலத்தை ரயில்வேயின் பொதுத்துறை நிறுவனமான ரயில் விகாஸ் நிகம் லிமிடட் நிர்மாணித்துள்ளது. இந்நிலையில் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி புதிய பாம்பன் பாலத்தின் நடுவே உள்ள செங்குத்து உயர ஏற்றி இறக்கும் அமைப்பு ஏற்றி இறக்கி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

புதிய பாம்பன் பாலத்தின் சிறப்பு அம்சங்கள்

  • இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கிப் பாலம் என்ற பெருமையைப் பெறுகிறது
  • புதிய பாம்பன் பாலம் கடலில் 6 ஆயிரத்து 790 அடி நீளத்தில் (சுமார் 2.8 கி.மீ) அமைகிறது
  • கடலின் குறுக்கே 100 வளைவுகளைக் (ஸ்பான்) கொண்டுள்ளது
  • 99 வளைவுகள் 18.3 மீட்டர் உயரமும், நடுவிலுள்ள செங்குத்து தூக்கி வளைவு 72.5 மீட்டர் உயரமும் கொண்டுள்ளன.
  • அருகிலுள்ள 110 ஆண்டுகள் பழமையான ரயில் பாலத்தை விட புதிய பாலம் 3 மீட்டர் அதிக உயரம் கொண்டது
  • எதிர்காலத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் வகையிலான அடித்தளமும் கட்டமைப்பும் கொண்டுள்ளது
  • இந்த ரயில் பாதை ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பால் (ஆர்டிஎஸ்ஓ) அங்கீகரிக்கப்பட்டுள்ளது
  • இங்கு பயன்படுத்தப்படும் அனைத்து தளவாடப்பொருட்களும் ராமநாதபுரம் அருகிலுள்ள சத்திரக்குடி ரயில் நிலையத்தில் இதற்கென்று அமைக்கப்பட்ட பட்டறையிலிருந்து தயாரிக்கப்பட்டதாகும்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details