திருநெல்வேலி: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் நெல்லை தனிப்படை போலீசாருக்கு பல்வேறு விஷயங்கள் கிடைக்கப்பெற்றும் வழக்கானது சூடுபிடிக்காமல் உள்ளது. கடந்த 2ஆம் தேதி காணாமல் போன ஜெயக்குமாரின் சடலம் மே 4ஆம் தேதி கரைசுத்து புதூரில் உள்ள அவரது தோட்டத்தில் எரிந்த நிலையில் மிக கோரமாக கண்டெடுக்கப்பட்டது.
வல்லுநர்கள் அறிக்கை:முதலில் ஜெயக்குமார் காணாமல் போனதாக கூறப்பட்டது. பின்னர் அவர் தோட்டத்தில் மர்மமான முறையில் சடலமாக உயிரிழந்து கிடந்தார். பாதி உடல் எரிக்கப்பட்ட நிலையில் ஜெயக்குமார் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஜெயக்குமார் உடலில் நுரையீரலில் திரவங்கள் எதுவும் இல்லை என தெரிந்தது. அதேபோல, அவரது குரல்வளை முற்றிலுமாக எரிந்துவிட்டதாக கூறப்பட்டது. ஏற்கெனவே இறந்தவரின் உடலை எரித்தால் மட்டுமே இதுபோன்ற அறிகுறிகள் காணப்படும் எனவே ஜெயக்குமார் எரிக்கப்படுவதற்கு முன்பே இறந்திருக்கலாம் என வல்லுநர்கள் தெளிவுபடுத்தினர்.
அதன்படி, ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. அதேசமயம் இறப்பதற்கு முன்பு அவர் எழுதியதாக வெளியான கடிதங்களில் அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு அவர்களால் தனக்கு ஆபத்து இருப்பதாக ஜெயக்குமார் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பல நபர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை இழந்திருப்பதாகவும் அவற்றில் அவர் வேதனையோடு தெரிவித்திருந்ததாகவும் கூறப்பட்டது. எனவே, ஜெயக்குமார் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றது.
கொலைக்கான முகாந்திரம்: இந்நிலையில், ஜெயக்குமார் உடல் இரும்பு கம்பிகளால் கட்டப்பட்டது மற்றும் உடற்கூறாய்வு அறிக்கை உட்பட பல்வேறு சம்பவங்கள் அவர் கொலை செய்யப்பட்டதற்கான முகாந்திரத்தை காட்டுவதாக உள்ளது. ஆனால், கொலைக்கான தடயங்களும் இதுவரை சிக்கவில்லை. எனவே இந்த வழக்கில் துப்பு துவங்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.