புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், மாங்கனாம்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் மேட்டுப்பட்டி இந்திரா நகரில் 'பகவான்' என்ற பெயரில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர். சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் கஜா புயல் மற்றும் கொரோனா காலத்தில் தான் நடத்தி வரும் டீக்கடையில் டீ மொய் விருந்து நடத்தி, அதில் கிடைத்த மொய் பணத்தை பொது மக்களுக்கு உதவிடும் வகையில் அரசிடம் வழங்கியுள்ளார்.
மேலும், இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த மக்களை காப்பாற்ற தமிழக அரசு பொதுமக்களிடமிருந்து உதவி கோரியபோதும், டீ மொய் விருந்து நடத்தி அதில் வந்த பணத்தை அரசிடம் செலுத்தி இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த மக்களுக்கு உதவியுள்ளார்.
இந்த வரிசையில் தற்போது, கேரளா வயநாடு நிலச்சரிவில் சிக்கி வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில் இன்று (ஆக.12) சிவகுமார் தனது டீக்கடையில் டீ மொய் விருந்து நடத்தி வருகிறார். சிவகுமாரின் டீ கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இலவசமாக டீ அருந்திவிட்டு அங்கு வைக்கப்பட்டுள்ள மொய் பாத்திரத்தில் தங்களால் இயன்ற நிதி உதவியை அளித்து வருகின்றனர்.
சிறுவன் 5K நிதியுதவி:இதில், மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகனும் ஏழாம் வகுப்பு மாணவனுமான சபரி என்ற சிறுவன் தனது சேமிப்பு பணமான ரூ.5 ஆயிரத்தை மொய் பணமாக அளித்து தேநீர் அருந்திச் சென்றது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
காலை 6:00 மணிக்கு தொடங்கிய இந்த டீ மொய் விருந்து மாலை 6 மணி வரை நடைபெற்று, இன்று (ஆக.12) திரட்டப்படும் இந்த நிதியானது கேரளா முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவக்குமாரினுடைய இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
இதுகுறித்து சிவக்குமார் கூறுகையில், "நான் தொடர்ந்து நான்காவது முறையாக இந்த டீ மொய் விருந்து நடத்தி வருகிறேன். ஏற்கனவே கஜா புயல், கொரோனா மற்றும் இலங்கை பொருளாதார நெருக்கடி போன்ற காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக டீ மொய் விருந்து நடத்தி உதவியுள்ளேன்.