தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவாஜி கணேசனின் ஆதரவாளர், அதிரடி பேட்டிகளுக்கு பெயர் பெற்றவர்; அரசியல் விமர்சனங்களின் நாயகர் ஈவிகேஎஸ் இளங்கோவன்! - EVKS ELANGOVAN

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய அனைவரும் அவரது வெளிப்படையான பேச்சு பற்றி குறிப்பிடத்தவறவில்லை. அவர் வெளிப்படையானவர் என்பதற்கு மேற்குறிப்பிட்ட அவரது பேட்டியே உதாரணமாக இருக்கிறது.

ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈவிகேஎஸ் இளங்கோவன் (Etv Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் சென்னை வந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன்,"ஒவ்வொரு கூட்டணிகள் மாறும் போது அரசியல் நிலைகள் மாறும் போது அதற்கேற்ப கருத்துக்களை சொல்வது இயல்புதான். நான் தவறான கருத்தை ஒரு காலத்தில் சொன்னால் அதை திருத்திக்கொள்வதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை,"என்று கூறினார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய அனைவரும் அவரது வெளிப்படையான பேச்சு பற்றி குறிப்பிடத்தவறவிலலை. அவர் வெளிப்படையானவர் என்பதற்கு மேற்குறிப்பிட்ட அவரது பேட்டியே உதாரணமாக இருக்கிறது. ஈவிகேஎஸ் இளங்கோவன் அரசியல் பாரம்பரிய மிக்க குடும்பத்தில் பிறந்த போதிலும் அவரது அரசியல் பயணம் தொடங்கியது 1980களில்தான். .

பெரியார் ஈவெராவின் கூடப்பிறந்த அண்ணன் கிருஷ்ணசாமி என்பவராவார். கிருஷ்ணசாமியின் மகனும், பெரியாரின் பேரனுமான ஈ.வி.கி.சம்பத், அறிஞர் அண்ணா திமுகவை தொடங்கிய போது ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக இருந்தார். திராவிட அரசியலில் தடம் பதித்த பெரியாரின் பேரனும், ஈ.வி.கி.சம்பத்தின் மகனுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தமது தந்தையை பின்பற்றி திராவிட அரசியலுக்கு செல்லவில்லை.

சிவாஜி கணேசன் ஆதரவாளர்: ஈவிகேஎஸ் இளங்கோவன் தேசிய அரசியல் பாதையில் பயணிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன். திமுகவின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான ஈவிகி சம்பத் உடன் சிவாஜி நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். பின்னாளில் அண்ணாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து சென்ற ஈவிகி சம்பத், தமிழ் தேசியக் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கினார்..அதில் சிவாஜி கணேசனும் இணைந்தார். பின்னர் ஒரு கட்டத்தில் காமராஜர் மீது கொண்டிருந்த பற்றால், காங்கிரஸ் கட்சியில் சிவாஜி இணைந்தார். அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த மூப்பனார், சிவாஜி ஆகியோரிடையே தனித்தனி கோஷ்டிகள் செயல்பட்டன.

சிவாஜியின் ஆதரவுடன் ஈவிகி சம்பத்தின் மகன் ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இப்படித்தான் ஈவிகேஎஸ் இளங்கோவன் அரசியல் பயணம் தொடங்கியது. 1984 ஆம் ஆண்டு, அதிமுக – காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டது. அப்போது சிவாஜி ஆதரவாளராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. அந்த தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.

இதையும் படிங்க:'தமிழக காங்கிரசின் ஒரு தூண் சாய்ந்து விட்டது'.. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்!

சிவாஜியின் ஆதரவாளராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் சூழலில் சிவாஜியின் முடிவின்படி எம்ஜிஆர் மனைவி ஜானகிக்கு ஆதரவு தெரிவித்தவர். சிவாஜி தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியை தொடங்கிய பிறகு 1989 சட்டமன்ற தேர்தலில் அந்தக் கட்சி சார்பாக ஈரோடு பவானி தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். எனினும் அவரால் வெற்றி பெற முடியவில்லை.. தேர்தல் தோல்விக்கு பிறகு சிவாஜி, கட்சியை கலைத்து விட்டார். எனவே, மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் திரும்பினார்.

அதிரடி பேட்டிகள்:1996ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போது, தமிழக காங்கிரஸ்-அதிமுக கூட்டணியை அப்போதைய பிரதமராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் நரசிம்மராவ் முடிவு செய்தார். ஆனால், அவரது இந்த முடிவுக்கு மூப்பனார், ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினர். எனவே அப்போதைய காலகட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவன் நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியை அபபோதைய பின்னடைவில் இருந்து மீட்பதற்கு உதவியவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தபோது மிகவும் ஆக்டிவ் ஆக செயல்பட்டார். தினந்தோறும் பத்திரிகையாளர்களை சந்தித்து தமிழக அரசியல் சூழல் குறித்து அதிரடியாக கருத்துகளை தெரிவித்து வந்தார். 1996ஆம் ஆண்டு காலகட்டத்தில் திமுக அரசை கடுமையாக விமர்சித்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். 1998ஆம் ஆண்டு அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்தபோது, அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். சோனியா இந்திய பெண்மணி இல்லை என்றும், அவரது இத்தாலி பெயரை குறிப்பிட்டும் விமர்சனங்கள் செய்தார்.

ஜெயலலிதா மீது விமர்சனம்:பதிலுக்கு தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் ஜெயலலிதாவின் உண்மையான பெயர் என்ன தெரியுமா என்று கேட்டு அதற்கு பதிலும் சொல்லி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால், ஜெயலலிதாவின் அரசியல் விரோதிகளில் ஒருவராக ஈவிகேஎஸ் இளங்கோவன் மாறினார். இவ்வளவுக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவனின் தாயார் சுலோசனா சம்பத் அதிமுகவில் முதுபெரும் தலைவராக பதவி வகித்தார். எனினும் கூட அதிமுகவையும், ஜெயலலிதாவையும் விமர்சிக்க ஈவிகேஎஸ் இளங்கோவன் தயங்கியதில்லை.

2001ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தது. அப்போது தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுடன் கூட்டணி பேச்சுவார்ததைகளிலும் ஈடுபட்டார். எனவே, எதிரணியில் இருக்கும்போது விமர்சிக்கவும், கூட்டணிக்குப் பின்னர் கருத்தொற்றுமை அடிப்படையில் பணியாற்றுவதற்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன் பக்குவப்பட்டிருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

கருணாநிதி மீதும் விமர்சனம் :2004ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் திமுக இடம் பெற்றிருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மத்திய ஜவுளிதுறை இணை அமைச்சராக இருந்தார். அப்போதும் கூட திமுகவுக்கு எதிராக சில சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். குறிப்பாக 2ஜி விவகாரம் தொடர்பாக திமுகவுக்கும்-காங்கிரஸ் கட்சிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது கருணாநிதி, கனிமொழி ஆகியோரை ஈவிகேஎஸ் இளங்கோவன் கடுமையாக விமர்சித்தார்.

2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, சென்னை வந்தபோது அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். இது மிகவும் ஆட்சேபகரமான கருத்தாக இருந்தது. இதனால், அதிமுகவினர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் சென்னை வீட்டை சூழ்ந்து தாக்கினர். ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். அந்த சமயத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் டெல்லியில் தலைமறைவாக இருந்தார்.

தமிழிசை மீது விமர்சனம்:2015ஆம் ஆண்டின் இறுதியில் அப்போதைய தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜனை ஈவிகேஎஸ் இளங்கோவன் கடுமையாக விமர்சனம் செய்தார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கரகாட்டம் ஆடும் பெண் போல இருப்பதாக கூறியிருந்தார். தமிழசை மீதான விமர்சனம் தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. தமிழக பாஜகவினர் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இவ்வளவுக்கும் தமிழிசை செளந்தரராஜனின் தந்தை குமரி ஆனந்தன் முதுபெரும் காங்கிரஸ் தலைவர் ஆவார். இருந்தும் எதிரணியில் இருக்கும் தலைவர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சனங்களில் இருந்து தப்பவில்லை. பின்னர் தமிழிசை மீதான தமது கருத்துக்காக மனம் வருந்துவதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.

2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்திருந்த சமயத்தில் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்களில் பேசிய ஜெயலலிதா, தாம் தவ வாழ்க்கை வாழ்வதாக கூறி வந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் கடந்த 2016ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், "தவ வாழ்க்கை மேற்கொள்வதாகக் கூறிவரும் ஜெயலலிதா இமயமலைக்குச் செல்வது மக்களுக்கு நிம்மதி அளிக்கும்," என்று விமர்சித்தார்.

அரசியலில் இருந்து விலக முடிவு:ஆனால், அதே நேரத்தில் 2016ஆம் ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரை உடல் நலம் விசாரிப்பதற்கு மருத்துவமனக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்றார். அந்த‍ அளவுக்கு அவரிடம் அரசியல் பக்குவமும் இருந்தது. 2021ஆம் ஆண்டு ஆக்டிவ் அரசியலில் இருந்து ஈவிகேஎஸ் விலக முடிவு செய்தார். அவரது மகன் திருமன் ஈவேரா, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக ஆனார். 46 வயதான திருமகன் ஈவேரா கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி உயிரிழந்தார். மகனின் இழப்பால் ஈவிகேஎஸ் இளங்கோவன் மிகவும் வேதனையில் இருந்தார். அதன் பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தாம் போட்டியிடப்போவதில்லை என்றும் அவர் கூறி வந்தார்.

ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வற்புறுத்தியதன் அடிப்படையில் போட்டியிட ஒப்புக் கொண்டார். இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக சட்டப்பேரவைக்குள் ஈவிகேஎஸ் இளங்கோவன் அடியெடுத்து வைத்தார். 38 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் எம்எல்ஏ ஆன அவரிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி கேட்டபோது, "முதன்முறையாக எம்எல்ஏ ஆனபோது சட்டப்பேரவையில் ஏசி வசதி இல்லை. இப்போது ஏசி வசதி இருக்கிறது," என்று வெளிப்படையாக தமது மனதில் தோன்றியதை கூறினார்.

பாரம்பரிய மிக்க அரசியல் குடும்பத்தில் பிறந்து அரசியலில் தடம் பதித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு விமர்சன அரசியலுக்கு ஏற்பட்ட பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. அதிரடிகளும் விமர்சனங்களும் இருந்தால்தான் அரசியல் களைகட்டும். இனி அவரது அதிரடி பேட்டிகள் இல்லாத களமாக தமிழக அரசியல் களம் இருக்கப்போகிறது. அது பெரிய வெற்றிடம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details