தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அணைக்காக உயிர்த்தியாகம் செய்த சிறுமியை குலதெய்வமாக வழிபடும் மக்கள்.. நல்லம்மன் கோயிலின் பின்னணி என்ன? - Noyyal River

Special Worship On Noyyal River: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம் அருகே நொய்யல் ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை நடுவே உள்ள நல்லம்மன் கோயிலில், ஆண்டு முழுவதும் நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரவேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நல்லம்மன் கோயில் சிறப்பு வழிபாடு
நல்லம்மன் கோயில் சிறப்பு வழிபாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 7, 2024, 10:38 PM IST

திருப்பூர்: கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலை அருகே உற்பத்தியாகி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 165 கி.மீ பயணம் செய்து காவிரியில் கலக்கும் ஆறு தான் நொய்யல் ஆறு. காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறாக இருக்கும் இந்த ஆற்றின் நீர்ப்பிடிப்பு என்பது சிறுவாணி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியே ஆகும்.

நல்லம்மன் கோயில் சிறப்பு வழிபாடு (Video Credit - ETV Bharat Tamilnadu)

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னதாக கோவை, திருப்பூர் பகுதியில் நொய்யல் ஆற்று நீர் குடிப்பதற்கு மிகவும் சுவை மிகுந்த நீராக இருக்கும் என்று அதனை புழங்கிய பெரியவர்கள் கூறுகின்றனர். அப்படி மிகச்சிறந்த சுவைமிகு தண்ணீர் தந்த இந்த நொய்யல் ஆற்றில், கொங்கு சோழர்கள் காலத்தில் தான் பெருமளவு பாசனத்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் அடிப்படையில் சுமார் 32 இடங்களில் குளங்கள் அமைக்கப்பட்டு நொய்யல் ஆற்று நீர் சேகரிக்கப்பட்டு வந்திருக்கிறது. இந்த குளங்களில் சேமிக்கப்படும் தண்ணீருக்காக 30க்கும் மேற்பட்ட தடுப்பணைகளும் கட்டப்பட்டு உள்ளன. அதில் இன்றளவும் பல அணைகள் பெரும் கல் கட்டுமானங்களாக இருக்கின்றன.

அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம் அருகே நொய்யல் ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை தான் தியாகத்தின் சின்னமாகவே இருக்கிறது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் அணை கட்டப்பட்ட போது, அணை உடையாமல் இருப்பதற்காக நல்லம்மன் என்ற சிறுமி உயிர்த்தியாகம் செய்துள்ளார்.

இதனை அடுத்து, அணைக்காக உயிரையே தியாகம் செய்த நல்லம்மன் என்ற அந்த சிறுமியை கன்னிமார் தெய்வமாகவும், குலதெய்வமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரும் வழிபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில், திருப்பூர், மங்கலம் அருகே நொய்யல் ஆற்றில் அணை நடுவே உள்ள நல்லம்மன் கோயிலில் ஆடி மாதம் ஒரு பிரிவினரும், கார்த்திகை மாதத்தில் மற்றொரு சமூகத்தினரும் பொங்கல் வைத்து விழா நடத்துகின்றனர்.

இதில் நொய்யல் ஆற்றில் அணை நடுவே உள்ள நல்லம்மன் கோயிலில் பொங்கல் வைத்து, சிறுவர்களுக்குப் பிடித்த தின்பண்டங்களை படைத்து, சிறப்புப் பூஜைகள் செய்து வழிபடப்படுகிறது. மேலும், நொய்யல் ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வர வேண்டும் என்றும் ஆற்றுக்கு பூஜை செய்து பூக்கள் தூவி வழிபாடு நடத்தப்படுகிறது.

அந்தவகையில், நேற்று (ஆக.6) நொய்யல் ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வரவேண்டி நல்லம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு நல்லம்மனுக்கு பொங்கல் வைத்தும், சிறுவர்களுக்கு பிடித்த தின்பண்டங்களை படையலாக வைத்தும் பூஜை செய்து வழிபட்டனர்.

இந்த பூஜை குறித்து கோயிலின் பூசாரி திருமூர்த்தி கூறுகையில், "அணைக்காக உயிரை தியாகம் செய்த சிறுமிகளை எங்களது சமூகத்தினர் குல தெய்வமாக வணங்கி வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18க்கு அடுத்த வரக்கூடிய செவ்வாய்க் கிழமையில் பொங்கல் வைத்து நல்லம்மனுக்கும், கன்னிமார் தெய்வங்களுக்கும் படையலிட்டு மக்கள் நலம் வாழவும், ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வரவும் வேண்டும் என்று வழிபாடு நடத்துகிறோம்" என்றார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:கமகமக்கும் கறி விருந்து; குழந்தைகளை ஏலம் விட்ட நேர்த்திக்கடன்..களைகட்டிய புனித செபஸ்தியார் கோயில் திருவிழா!

ABOUT THE AUTHOR

...view details