மதுரை:சர்வதேச பெண் குழந்தைகள் தினம் டிசம்பர் 19, 2011 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் அறிவிக்கப்பட்டது. பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பு, உரிமை வழங்க வலியுறுத்தி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11, 2012 அன்று அனுசரிக்கப்பட்டது.
உலகளவில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிப்பதற்கும், அவர்களின் உரிமைகள் மற்றும் அதிகாரங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் அக்டோபர் 11ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
வழக்கறிஞர் பாலசுந்தரி, வழக்கறிஞர் செல்வ கோமதி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) சர்வதேச பெண் குழந்தை தினம் 2024 கருப்பொருள்: 2024 ஆம் ஆண்டின் சர்வதேச பெண் குழந்தை தினத்தின் கருப்பொருள் "எதிர்காலத்திற்கான பெண்களின் பார்வை" என்பதாகும். சர்வதேச பெண் குழந்தைகள் தினம் குறித்து, குழந்தைகள் நலக் குழு மற்றும் சிறார் நீதிக் குழுமத்தில் உறுப்பினராக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த வழக்கறிஞர் பாலசுந்தரி ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், "தொழில் நுட்ப வளர்ச்சி அபரிமிதமாக வளர்ந்துள்ள 21 ஆம் நூற்றாண்டிலும் பெண் குழந்தைப் பிறப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் சூழலில் நாம் இல்லை. அக்குழந்தைகள் குறித்த பழமைக் கருத்துக்கள் இன்னும் நம் சமூகத்தில் வேரூன்றியுள்ளன.
குழந்தைகள் பிறப்பு விகிதம்:தமிழ்நாட்டைப் பொறுத்தவரை குழந்தைகள் பிறப்பு விகிதம் கடந்த 2001ஆம் ஆண்டில் 1000 ஆண்களுக்கு 959 பெண்கள் என்ற முறையில் இருந்துள்ளனர். ஆனால், கடந்த 2011 ஆம் ஆண்டு 1000 ஆண்களுக்கு 943 பெண்கள் என பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. 2021-ல் கணக்கெடுப்பு மேற்கொள்ளாததால் புதிய விகிதம் குறித்து தெரியவில்லை. பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் கவலையளிப்பதாக உள்ளது.
பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை நாம் இன்னும் உருவாக்கிக் கொடுக்கவில்லை. பெண் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் துரிதமாக நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுகிறதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த வழக்குகளை கண்காணிக்கக்கூடிய அமைப்புகளும், நீதிமன்றங்களும் சரியாக செயல்படுகிறதா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பெண் குழந்தைகளுக்கு தேவையான சட்டங்கள் உள்ளன. ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் வேகம் தேவைப்படுகிறது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:உங்க வீட்டுல பெண் குழந்தை இருக்கா? இந்த கட்டுரை உங்களுக்குத்தான்
அதனைத்தொடர்ந்து, சோகோ அறக்கட்டளையின் இணை இயக்குநரும், குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளருமான வழக்கறிஞர் செல்வ கோமதி கூறுகையில், "குழந்தைகள் மீதான வன்முறை அதிகமாக இருந்தாலும் அதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண் குழந்தைகள். தற்போது, கல்லூரி பயிலும் முதலாம் ஆண்டு மாணவியருடன் கலந்துரையாடல் செய்கையில், தங்களது சிறுவயதில் பாலியல் நீதியான வன்முறையை எதிர்கொண்டுள்ளேன் என்று கூறுகின்றனர்.
மேலும், இது போன்ற சட்ட நுணுக்கங்கள் தெரியாத காரணத்தினால், பாதிப்பு குறித்து குடும்ப உறுப்பினர்களிடம் பகிர முடியாத சூழல் உள்ளதாக தெரிவிக்கின்றனர். இவர்களுக்கான கவுன்சிலிங் (Counselling) தேவையாக உள்ளது. 500 மாணவிகளில் 30 மாணவிகள் இதுபோன்ற பாதிப்பை எதிர்கொண்டவர்களாக உள்ளனர்.
மாணவிகளுக்கு விழிப்புணர்வு: இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற சமூக வலைதளங்களும் பெண் குழந்தைகளுக்கு எதிராக உள்ளது. சமூக வலைதளங்கள் மூலமாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் குழந்தைகள் பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கு ஆளாகிறார்கள் என்று மெட்டா புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. தனி மனிதப் பாதுகாப்பு என்பது கேள்விக்கு உள்ளாகிறது. இதற்கான விழிப்புணர்வு அவசியமாகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சைபர் கிரைம் காவல்துறையை வலுப்படுத்த வேண்டும். சைபர் கிரைம் குறித்து மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்.
ஆண் குழந்தைகளுக்கு Don't Touch:பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் (good Touch), கெட்ட தொடுதல் (bad Touch) கற்பிப்பதை போன்று, ஆண் குழந்தைகளுக்கு Don't Touch என்று கற்பித்தல் வேண்டும். ஆண் குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெரியவர்களுக்கும் 'டோன்ட் டச்' குறித்து கற்பிப்பது அவசியம்.
பாலின சமத்துவம்:பாலின சமத்துவம் குறித்து பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் இடம் பெற வேண்டும். இவை சக மனிதர்களை எவ்வாறு பார்க்க வேண்டும் என்ற புரிதலை இன்றைய இளம் தலைமுறைக்கு உருவாக்கும். அதேபோன்று, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில், இலவசக் கல்வி பெறுவதற்கான வயது வரம்பை 14லிருந்து 18 ஆக உயர்த்த வேண்டும். இதன் மூலம் அனைத்துக் குழந்தைகளும் குறிப்பாக பெண் குழந்தைகள் அதிகம் பயன் பெறுவர்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்