திண்டுக்கல்:மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலாத்தலமாகும். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருவது வழக்கம். கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத் தலங்களாக இருக்கக்கூடிய பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம், தூண் பாறை உள்ளிட்ட இடங்களுக்கு அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் சென்று, அவ்விடங்களை கண்டுகழித்து மகிழ்வர்.
இதில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது தான் குணா குகை. 1821 ஆம் ஆண்டு அமெரிக்கரான பி.எஸ்.வார்டு என்பவர் இந்த இடத்தை கண்டுபிடித்ததாக வரலாற்றில் கூறப்படுகிறது. மிகவும் திகிலூட்டப்படும் இந்த இடத்திற்கு டெவில்ஸ் கிச்சன் அதாவது பேய்களின் சமையலறை என்ற பெயரும் உள்ளது. பெயர் ஏற்றவாறு இடமும் சற்றும் சளைத்தது அல்ல என்பது போல் தான் இருக்கிறது குணா குகை.
சாலையிலிருந்து வனப்பகுதிக்குள் நடந்து செல்லும் பொழுது இருபுறமும் இருக்கக்கூடிய மரங்களின் வேர்கள் பிரமிப்பூட்டக்கூடிய வகையில் அமைந்திருக்கும். கமல் நடிப்பில் 1991ஆம் ஆண்டு வெளியான குணா படத்திற்குப் பிறகு இந்த பேய்களின் சமையலறை குணா குகை என்றே அழைக்கப்பட்டது. இப்படத்தில் வரும் கண்மணி அன்போடு காதலன் என்ற பாடல் குணா குகைக்குள் படமாக்கப்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இதுவரை குணா குகைக்குள் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே மஞ்சுமெல் பாய்ஸ் என்ற திரைப்படம். இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
மலையாள மொழியில் வெளியாகி உள்ள இப்படத்தில் நண்பர்களாக கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்து குணா குகைக்குள் தவறி விழும் ஒரு நண்பனை காப்பாற்றி, மீண்டும் அழைத்து செல்வதுதான் படத்தின் கதை. இப்படம் தற்போது வெளியாகி மலையாள சினிமா ரசிகர்களை மட்டுமில்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
இந்தப் படம் வெளியானதில் இருந்து குணா குகைக்குள் வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தே உள்ளது. எத்தனை அடி ஆழம் என்று இதுவரை கண்டுபிடிக்க முடியாத இந்த குகைக்குள் சென்றவர்களில் ஒருவரைத் தவிர வேறு யாரும் மீண்டு வந்ததே இல்லை.
இது குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், "சுமார் 2 ஆயிரத்து 500 அடி ஆழமுள்ள குணா குகைக்குள் விழுந்த நபர்களின் உடல்களைக் கூட இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொழில்நுட்பங்களின் உதவிகளை கொண்டு முயன்று பார்த்தும் எதுவும் முடியவில்லை. இங்கு தற்கொலை அல்லது தவறி விழுந்த நபர்களின் உடல்கள் கிடைக்காது. இதனால் அதன் மேற்பரப்பில் தான் உயிரிழந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்வார்கள்" என்று கூறுகின்றனர்.
இதே போன்று பல்வேறு சுற்றுலாத் தலங்கள் கொடைக்கானலில் உள்ளது. தொப்பி தூக்கி பாறை, பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்கொலைக்கு முயன்று விழுந்தவர்கள் ஒரு சிலர் உயிருடனும், பிணமாகவும் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் குணா குகைக்குள் விழுந்தவர்கள் யாருமே இதுவரை உயிருடன் மீட்கப்படவில்லை. இந்த ஒரு கேரளா நபரை தவிர. தற்போது குணா குகைக்குள் செல்லக்கூடிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் பாதுகாப்பு அம்சங்களை மேலும் பலப்படுத்த கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க:கொடைக்கானல் நகர் பகுதியில் உலா வரும் காட்டெருமை கூட்டம்!