தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டம் அருகே உள்ள புதுக்குடி தேவர்சந்து பகுதியைச் சேர்ந்தவர், முருகன் மகன் கணேசன். இவர் வல்லநாட்டில் உள்ள ஹோட்டலில் டீ மாஸ்டராக இருந்து வந்தார். கடந்த 16.11.2023 அன்று வேலைக்குச் சென்ற இவர், அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது போனுக்கும் தொடர்பு கிடைக்காமலிருந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் ஸ்ரீ வைகுண்டம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இதையடுத்து, ஸ்ரீ வைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து கணேசனைத் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில், கடந்த 15.11.23 அன்று வல்லநாடு அருகே உள்ள மணக்கரை கிராமத்தில் விவசாயி மணி என்பவர் கொலை செய்யப்பட்டார். அதற்கு மறுநாளிலிருந்து கணேசன் காணவில்லை. அந்த கொலை சம்பவம் இரு சமுதாயத்தினரிடையே நடந்தது என்பதால் கொலை செய்யப்பட்ட தரப்பினர் கணேசனை கடத்திச் சென்று கொலை செய்திருக்கலாம் என்று கருதப்பட்டது.
இதனால், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை பிரிவு உதவி ஆய்வாளர் பெட்ரிக் தலைமையிலான போலீசார் கணேசனின் செல்போன் சிக்னல் மூலம் தேடிவந்தனர்.