சென்னை: அண்ணா பல்கலைக் கழக மாணவி கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ராஜா அண்ணாமலைபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதிமுக, நாம் தமிழர், பாஜக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா பல்கலைக் கழகம் விவகாரத்தில் பெண்ணின் எஃப்ஐஆர் லீக் செய்யப்பட்டது தொடர்பாகவும் விசாரணையானது நடத்தப்பட்டு வருகிறது. தேசிய மகளிர் ஆணையம் இவ்விவகாரத்தில் தலையிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக் கழகத்தில் இதைத் தொடர்ந்து மாணவிகள் நலனை பாதுகாக்க 16 பேராசிரியர்கள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு மாணவிகளின் நலனை காக்க கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் அமைப்பது, கூடுதலாக பாதுகாவலர்களை நியமிக்க கோரியுள்ளது.
இதற்கிடையே, மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரி பாஜக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான சிறப்பு புலனாய்வு அமைப்பு விசாரிக்க உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் இழப்பீடு வழங்கவும், சென்னை காவல் ஆணையருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், மாணவியிடம் இருந்து கல்விக் கட்டணம் ஏதும் அண்ணா பல்கலைக்கழகம் வசூலிக்க கூடாது எனவும் அந்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.
இதையும் படிங்க:லீக்கான மாணவி எஃப்ஐஆர்.. கண்காணிப்பில் 14 பேர்.. இரண்டு சேனல்கள் மீது வழக்கு பதிவு..!
இந்நிலையில், மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான சிறப்பு புலனாய்வு அமைப்பு விசாரணையில் இறங்கியுள்ளது. அந்த வகையில், மாணவி வன்கொடுமை வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன் வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள மண்டபம் சாலையில் ஞானசேகரன் வீடு அமைந்துள்ளது. இன்று அந்த வீட்டில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்களையும், லேப்டாப்பையும் எடுத்துள்ளனர். மேலும், வீடுகளில் கொள்ளை அடித்த பணத்தை வைத்து ஞானசேகரன் பல்வேறு சொத்துக்களை வாங்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
ரகசிய கேமரா
கோட்டூர்புரம் மட்டுமில்லாமல் ஞானசேகரன் சென்னையில் பல்வேறு இடங்களில் கொள்ளை அடித்த பணத்தின் மூலம் சொத்துக்கள் வாங்கிய ஆவணங்கள் மற்றும் சொந்த ஊரான உத்திரமேரூரில் மேலும் பல சொத்துக்கள் வாங்கிய ஆவணங்களை சிறப்பு புலனாய்வு குழுவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், கோட்டூர்புரத்தில் உள்ள ஞானசேகரன் வீட்டில் கிடந்த ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்த பேனா, பென் டிரைவ் மற்றும் பட்டாக்கத்தி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்துள்ளனர். சில ஆபாச வீடியோக்களில் ஞானசேகரன் வேறு பெண்ணுடன் இருக்கும் வீடியோக்கள் இருப்பதையும் கண்டறிந்துள்ளனர். இவை அனைத்தையும் காவல்துறையினர் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.