மதுரை:தற்போதுள்ள தமிழக நிலப்பரப்பில் உள்ள வற்றாத ஜீவநதிகள் எனக்கூறப்படும் காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட அனைத்து நதிகளும் வற்றிவிட்ட நிலையில், நமது முன்னோர்கள் கண்டறிந்த மிகச்சிறந்த நீரியல் நிர்வாக முறையின் வெளிப்பாடான ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் உள்ளிட்டவை, ஆர்டிக் துருவப் பகுதியிலிருந்து வரும் அழியும் நிலையில் உள்ள பறவைகளுக்கு வாழ்விடமாக மாறியுள்ளது.
பருவ காலத்தில் பொழியும் மழைநீரைச் சேமித்து, அதனை சரியான முறையில் பகிர்ந்தளித்து, மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளித்தவர்கள் பண்டைத் தமிழர்கள். இப்போதும்கூட அவர்கள் உருவாக்கி வைத்த நீர்நிலைகளைத்தான் நாம் பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் பல அழிக்கப்பட்டபோதும்கூட, எஞ்சியுள்ள நீர்நிலைகளே இன்றைக்கும் நம்மை வாழ வைத்து வருகிறது.
இந்நீர்நிலைகளைச் சார்ந்து வாழும் உயிரின வகைகளில், பறவைகளின் பங்களிப்பு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. புள்ளி அலகு வாத்து, கொண்டை வாத்து, விசில் வாத்து, தாழைக்கோழி, அல்லி மடையான் உள்ளிட்ட பல்வேறு வகையான உள்நாட்டுப் பறவைகளோடு, வயல் உள்ளான், பச்சைக்கால் உள்ளான், வாலாட்டி உள்ளான் (Sandpipers), கொசு உள்ளான் (Little stint) உள்ளிட்ட உள்ளான் வகை பறவையினத்தில் மட்டும் நான்கு வகைகள் இந்நீர்நிலைகளை நோக்கி வருகின்றன.
ஊசி வால் சிறகி (Northern pingai), தட்டை இறகு வாத்து (Northern shoveler), பனக்கொட்டைச் சிறகி (Blue winged teal & Green winged teal), சந்தனத்தலை வாத்து (Wigeon) சைனா, மங்கோலியாவிலிருந்து வரக்கூடிய வரித்தலை வாத்து (Bar headed goose) சுமார் 27 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கக்கூடியதாகும்.
இவை அனைத்தும் ஆகஸ்ட் மாதம், தென் மாவட்டக் கண்மாய்களுக்கு வருகை தந்து மார்ச் மாதம் திரும்பிச் சென்று விடுகின்றன. இவற்றில் சில இனப்பெருக்கத்திற்காகவும், சில உணவுக்காகவும் வருகை தருகின்றன. இதனால் அப்பகுதிகளில் உணவுச் சங்கிலியில் நல்ல மாற்றத்தை உணர முடிகிறது. இந்த நிலையில், பறவையியல் அறிஞர் டாக்டர் பாலச்சந்திரன் தலைமையில், பறவை ஆய்வாளர்கள் பால் ஆண்டனி, முருகேசன் உள்ளிட்ட குழுவினர், 107 பறவையினங்கள் பாரம்பரிய நீர் ஆதாரங்களான கண்மாய் ஏரி ஊரணிகளை சார்ந்து வாழ்வதை உறுதி செய்துள்ளனர்.
இது குறித்து பறவையியல் அறிஞரும், பம்பாய் இயற்கை வரலாற்று சங்கத்தின் உதவி இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவருமான டாக்டர் பாலச்சந்திரன் கூறுகையில், “பாரம்பரிய நீர்நிலைகளுக்கு வந்து செல்லும் பறவைகள், பல்லுயிர்ச் சூழலுக்கு பெரிதும் பங்களிக்கின்றன. பறவைகள் சரணாலயங்களில் காண முடியாதவற்றை, இது போன்ற நீர்நிலைகளில் நாம் காண முடிகிறது. இயற்கையாக உள்ள சதுப்புநிலப் பகுதிகளில் அமைந்துள்ள நீர்நிலைகளை நோக்கி ஆர்டிக் துருவப் பகுதியிலிருந்து பறவைகள் வருகை தருகின்றன.
இவற்றில் குறிப்பிட்ட சில பறவையினங்கள் அழியும் நிலையில் உள்ளன. அவற்றை மீட்பதற்கு கண்மாய்களும், அதனைச் சார்ந்துள்ள வயல்வெளிகளும் முக்கிய காரணியாக அமைகின்றன. நமது தானியங்களை உண்ணக்கூடிய ஆர்டிக் பகுதி வாத்துகளும், தற்போது அதிகமாக காணப்படுகின்றன. மிகக் குறுகிய காலம் நடைபெற்ற எங்களது ஆய்வில் கிட்டத்தட்ட 107 வகையான பறவையினங்களைக் கண்டறிந்துள்ளோம்.
நீர்நிலைகளில் மட்டுமன்றி, நீர்நிலைகளைச் சார்ந்து வாழக்கூடிய பறவையினங்களும் அதிகமாக உள்ளன. பறவைகள் அதிகமாக இருந்தால், அப்பகுதி நல்ல வாழ்விடம் என்பதை உணர்ந்து கொள்ளலாம். உணவுச் சங்கிலியில் பறவைகளின் பங்களிப்பு அதிகமானது. மூன்று வகையான வாத்து இனங்கள், தங்களது குஞ்சுகளை அழைத்துச் செல்வதை பல நீர்நிலைகளில் நாங்கள் கண்டுள்ளோம்.
இப்பறவைகள் தங்களது இனப்பெருக்கத்திற்கு முக்கிய ஆதாரமாக, இந்த நீர்நிலைகளையே நம்பியுள்ளன. அழிவை நோக்கிச் செல்லும் ஆர்டிக் பறவையினங்களைக் காக்க வேண்டியது நம் கடமை. அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பது மிக மிக அவசியம்” என்றார்.