சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உட்பட 40 தொகுதிகளில் அடுத்த மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் திமுக கூட்டணி தொகுதிப்பங்கீடு முடிவடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், நீலகிரி மாவட்ட வேட்பாளராக 4வது முறையாக ஆ.ராசா மீண்டும் களம் காண்கிறார்.
யார் இந்த ஆ.ராசா?:பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் எஸ்.கே.ஆண்டிமுத்து, கிருஷ்ணம்மாள் தம்பதிக்கு மகனாக 23.05.1963 அன்று பிறந்தவர் ஆ.ராசா. தொடக்கக் கல்வியை வேலூரில் உள்ள அரசு ஆதிதிராவிட நல ஆரம்பப் பள்ளியில் 1973 வரையிலும், உயர்நிலைப் பள்ளிக் கல்வியை பாடாலூரிலுள்ள அரசுப் பள்ளியிலும் பயின்றார். தனது பட்டப்படிப்பை (B.Sc கணிதம்) முசிறி அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியிலும், சட்டப்படிப்பை (BL) மதுரை சட்டக்கல்லூரியிலும், முதுநிலை சட்டப்படிப்பை (ML) திருச்சியிலுள்ள அரசு சட்டக் கல்லூரியிலும் பயின்றார்.
வழக்கறிஞர் டூ அமைச்சர்: ஆ.ராசா கல்லூரியில் படிக்கும் போதே இருந்த அரசியல் ஈடுபாடு காரணமாக திமுக மாணவர் பிரிவில் சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையைத் துவங்கியுள்ளார். படிப்பை வெற்றிகரமாக முடித்த ஆ.ராசா ஒரு வழக்கறிஞராகத் தனது பணியைத் துவங்கினார். பிறகு, பரமேஸ்வரி என்ற பெண்ணை 1996 ஏப்ரல் 4ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது இவர்களுக்கு மயூரி என்ற மகள் ஒருவர் உள்ளார். மயூரி தற்போது, டெல்லியில் சட்டப்படிப்பு படித்து வருகிறார்.
மேலும், வழக்கறிஞராக இருந்த ஆ.ராசா முதன் முதலாக பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, 11ஆவது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வானார். பின்னர் 1999ல் நடைபெற்ற 13ஆவது மக்களவைக்கு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், பெரம்பலூர் தொகுதியின் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 1999 முதல் 2000ஆம் ஆண்டு வரை மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சராகவும், 2003ஆம் ஆண்டு வரை மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, 2004ஆம் ஆண்டு நடைபெற்ற 14ஆவது மக்களவைக்கான தேர்தலிலும் திமுக சார்பில் பெரம்பலூரில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 2004 - 2007 ஆண்டு வரை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும், பின்னர் 2007ஆம் ஆண்டு மே மாதம் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்று 2009ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.
தோல்வியே காணாத ஆ.ராசா ராஜினாமா: 2009ஆம் ஆண்டு நடைபெற்ற 15ஆவது மக்களவைக்கான தேர்தலில் திமுக சார்பில் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக ஜூன் 2009ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.