சென்னை: தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் சமீபத்தில் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் உள்ளார். அதேநேரம், இது தொடர்பான கானொலியை வெளியிட்டதாக தனியார் யூடியூப் சேனல் நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டை தமிழ்நாடு காவல்துறையினர் டெல்லியில் வைத்து கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.
அது மட்டுமல்லாமல், நேற்று ஃபெலிக்ஸ் ஜெரால்டின் வீடு மற்றும் அலுவலகத்தில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதன் பேரில், 4 கேமரா, கணினி ஹார்ட் டிஸ்க் உட்பட 29 பொருட்களை திருச்சி காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், ஃபெலிக்ஸ் ஜெரால்டின் RED PIX யூடியூப் நிறுவனம் தரப்பில் விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
அதில், “சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சில் RED PIX நிறுவனத்துக்கு உடன்பாடு இல்லை, அது RED PIX நிறுவனத்தின் கருத்தும் இல்லை. இருப்பினும், அந்த காணொளியால் காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் வருத்தம் அடைந்திருப்பதால் RED PIX நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது.