சென்னை: சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வந்த ராஜகோபாலன் என்பவர், வகுப்பறையில் மாணவிகளிடம் பாலியல்ரீதியாக இரட்டை அர்த்தங்களுடன் பேசுவது, மாணவிகளின் உடல் அமைப்பு மற்றும் அவர்கள் அணிந்து வரும் உடையை வைத்து அவர்களது நடத்தை குறித்து விமர்சிப்பது என பல்வேறு வழிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து, கடந்த 2021ஆம் ஆண்டு இதுதொடர்பான புகார்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அப்பள்ளியில் படித்த மாணவிகள் சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த புகார்களின் அடிப்படையில் சென்னை வடபழனி அனைத்து மகளிர் போலீசார், ராஜகோபாலன் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக, அவரிடம் இருந்து செல்போன், லேப்-டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. தொடர்ந்து அவர் ஜாமீனில் விடுதலை ஆனார்.