திருநெல்வேலி: நாடாளுமன்றத் தேர்தல் வருவதையொட்டி, அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கூட்டணி உறுதி செய்வது, பொறுப்பாளர்கள் நியமிப்பது போன்ற பணிகளில் அரசியல் கட்சியினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக, திமுக போன்ற பெரிய கட்சிகளும் பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளும் தொடர்ச்சியாக தேர்தல் ரீதியான கூட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், திருநெல்வேலி முழுவதும் இன்று (பிப்.4) குறிப்பிட்ட சமூகத்தின் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த போஸ்டரில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதிக்கு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவரையே காங்கிரஸ் வேட்பாளராக தேர்ந்தெடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு வேண்டுகோள் விடுத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிவுறாத நிலையில், குறிப்பிட்ட சமூகம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, பாஜகவின் தமிழ்நாடு சட்டமன்றக் குழுத் தலைவரும், திருநெல்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன், தேர்தல் அறிவிக்கும் முன்பே கடந்த வாரம் தேர்தல் அலுவலகத்தை பூமி பூஜையுடன் திறந்து வைத்தார். திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் நயினார் நாகேந்திரன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட கட்சி தலைமையிடத்தில் விருப்பம் தெரிவித்துள்ளார்.