தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகர், சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 8ஆம் தேதி தனது காதலியுடன் முத்துநகர் கடற்கரை பூங்காவிற்கு வந்துள்ளார். அங்கு இளைப்பாறுவதற்கு அமைக்கப்பட்டுள்ள குடை போன்ற பகுதியில் பிற்பகலில் யாரும் இல்லாத நேரத்தில் அவர்கள் தனிமையில் இருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், அந்த காதல் ஜோடியைத் தனது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். இதன் பின்னர் அந்த நபர், அந்த காதல் ஜோடியின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியதுடன். படத்தை வெளியிடாமல் இருக்க சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞரின் காதலியிடம் இருந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்துச் சென்றுள்ளார். இதனால் அந்த காதல் ஜோடி அதிர்ச்சி அடைந்தது.
இதனை அடுத்து சம்பவத்திற்கு மறுநாள், காதலியின் செயினை பறிகொடுத்த இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அதே முத்துநகர் கடற்கரை பகுதிக்குச் சென்று தன்னிடம் செயினை பறித்த நபர் அங்கு இருக்கிறாரா? என தேடியுள்ளனர். அப்போது செயினை பறித்த அதே நபர் அங்கு நின்று கொண்டிருந்ததைப் பார்த்த அந்த இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் செயினை பறிப்பில் ஈடுபட்ட அந்த நபரைப் பிடிக்க முயன்றுள்ளனர்.
அப்போது அந்த நபர் தனது இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டுத் தப்பி ஓடி உள்ளார். இதனை அடுத்து, செயின் பறிப்பில் ஈடுபட்ட அந்த நபர் விட்டுச் சென்ற இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு காதலியின் செயினை பறிகொடுத்த இளைஞர் வடபாகம் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்து புகார் தெரிவித்துள்ளார்.