திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் அருகே ராஜி என்பவருடைய நிலத்தில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மர்ம பொருள் ஒன்று விழுந்துள்ளது. அதன் காரணமாக சுமார் ஐந்து அடி அளவிலான பள்ளம் உருவாகியுள்ளது. இதனை அதே பகுதியைச் சேர்ந்த திருமலை என்பவர் பார்த்துள்ளார். ஆனால் ஏதோ சாதாரண பள்ளம் என்று நினைத்து விட்டுவிட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் திருமலை மீண்டும் அதே இடத்திற்கு சென்று அந்தப் பள்ளத்தை பார்க்கும்போது, அந்த பள்ளத்திலிருந்து அதிக வெப்ப அனலை உணர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் அப்பகுதி மக்களிடம் கூறிய போது, இந்த ஏன் இந்த பள்ளம் ஏற்பட்டது. பள்ளத்தை ஏற்படுத்திய மர்ம பொருள் என்னவென்று தெரியாமல் பீதி அடைந்தனர்.
இந்த நிலையில், அப்பகுதி பொதுமக்கள் இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் மற்றும் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார், அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர்.
மேலும், அந்த பள்ளத்தில் இருந்த மண் மற்றும் சாம்பலின் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். ஆய்வுக்கு பின்னரே விழுந்த மர்ம பொருள் விண்கல்லா? அல்லது ஏதேனும் இடி விழுந்து இந்தப் பள்ளம் ஏற்பட்டதா? என்பது தெரியவரும் என வருவாய் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இச்சம்பவம் குறித்து அறிந்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டார்.