ஈரோடு:கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் சுமார் 300 சவரன் நகையுடன் குளித்த சென்னையை சேர்ந்த அதிமுக பிரமுகரை போலீசார் பாதுகாப்பு காரணமாக வெளியேற்றினர்.
தொடர் பொங்கல் விடுமுறை காரணமாக ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கொடிவேரி அணைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், மதுரை, தருமபுரி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக மாநிலம் மைசூர், பெங்களூர் போன்ற பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கு குடும்பத்துடன் வருகை தந்தனர்.
அணையில் அருவி போல் கொட்டும் தண்ணீரில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை பாதுகாப்பாக பல மணி நேரம் நின்று குளித்தும் அருகில் உள்ள பூங்காவில் குழந்தைகளுடன் உற்சாகமாக விளையாடியும் மகிழ்ந்தனர். அதேபோன்று குடும்பம் குடும்பமாக அணையின் மேல் பகுதியில் பரிசல் பயணம் மேற்கொண்ட சுற்றுலா பயணிகள், அணையின் கீழ் பகுதியில் விற்பனையான சுவையான மீன் வகைகளை உண்டு மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க:தாமிரபரணி ஆற்றில் மூழ்கி மாயமான மற்றொரு பள்ளி சிறுமியின் உடல் மீட்பு!
இந்நிலையில், கொடிவேரி அணையில் ஏராளமான நகைகளை அணிந்து கொண்டு (சுமார் 300 சவரன்) வாலிபர் ஒருவர் குளித்துக்கொண்டு இருப்பதாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து பங்களாபுதூர் போலீசார், அந்த வாலிபர் குளித்துக்கொண்டு இருந்த பகுதிக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த நபரை சுற்றி உள்ள கும்பலையும் போலீசார் கண்காணித்து வந்தனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகியும் அந்த வாலிபர் அணையில் இருந்து வெளியேறாத நிலையில், அந்த நபரை சுற்றிலும் கூட்டம் அதிகரிக்கவே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அணைக்குள் சென்று அந்த நபரை வெளியே பாதுகாப்பாக அழைத்து வந்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி விஜய் என்பதும், பொங்கல் விடுமுறைக்கு கொடிவேரி அணைக்கு குடும்பத்துடன் வந்து இருப்பதும் தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து பாதுகாப்பு கருதி அதிமுக பிரமுகரை போலீசார் குடும்பத்துடன் அணையில் இருந்து வெளியேற்றினர். மேலும், இதுதொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.