சென்னை: கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள திருரங்கடி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் பஷீர் (53). இவர் மீது திருரங்கடி காவல் நிலையத்தில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு 2014 ஆம் ஆண்டு நம்பிக்கை துரோகம் மற்றும் மோசடி வழக்குகள் பதிவாகின. இதையடுத்து போலீசார் இவரை கைது செய்து விசாரணை நடத்த தேடி வந்தனர். ஆனால், அப்துல் பஷீர் போலீசில் சிக்காமல் வெளிநாட்டுக்கு தப்பியோடி தலைமறைவாகிவிட்டார்.
லுக் அவுட்
இந்த நிலையில், வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வந்த அப்துல் பஷீரை கைது செய்ய கேரள மாநிலம் மலப்புரம் காவல்துறை கடந்த ஆண்டு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மலப்புரம் காவல் ஆணையர் அப்துல் பஷீரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். மேலும் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் அவர் மீது எல்ஓசி (Look out circular) போடப்பட்டது.
இந்த நிலையில், சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று (ஜன.29) நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து பயணிகளை வெளியே அனுப்பி கொண்டு இருந்தனர்.