சென்னை: ஆவடி அடுத்த முத்தா புதுப்பேட்டை பாரதி நகர் 8வது தெருவில் சத்ய நாராயணன் என்ற கார்த்தி (37)
என்பவர், வாடகை வீட்டில் அவரது 32 வயதான மனைவி, 7 மற்றும் 5 வயதில் பிள்ளைகள் ஆகியோருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் சத்யநாராயணனின் பெற்றோர் ரதி ராஜகோபால் முத்தா புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தனர். அதில், தனது மகன் காட்டூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். அவர் ஆன்லைன் செயலி மூலம் ஒரு லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
பின்பு, கடனைச் செலுத்த தவறியதால் பல எண்களிலிருந்து அவருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் தொடர்ந்து வந்துள்ளது. மேலும், அவரது மனைவியின் புகைப்படத்தையும் ஆபாசமாக சித்தரித்து அனுப்பியதால் சத்தியநாராயணன் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில், தற்கொலை செய்து கொண்ட அவர் மயங்கினார்.
பின்னர், அவரை, அவரது மனைவி மற்றும் உறவினர்கள் உதவியுடன் பூந்தமல்லி பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எனவே, தனது மகனின் இறப்புக்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முத்தா புதுப்பேட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இறந்த சத்யநாராயணன் இறுதியாக மருத்துவமனையில் ஆன்லைன் மூலம் பணம் பெற்றதாகவும், இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், இனி வாழவே முடியாது என உறவினர்களிடம் வேதனையோடு கூறியதாக தெரிவித்தார்.
மேலும், ஆன்லைன் மூலம் கடன் கொடுத்து மன உளைச்சலில் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதால், இனி உயிரிழப்புகள் நிகழாமல் இருக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:'நரம்பு பகுதிக்கு குறி'.. கொலைக்கு 45 நிமிடங்கள் முன்பு ஸ்கெட்ச்.. ஆம்ஸ்ட்ராங் வீழ்த்தப்பட்டது எப்படி?