சென்னை:சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஷாதர் அலாம் என்பவர், கடந்த ஜூன் 25ஆம் தேதி அவரது சொந்த ஊரான பீகார் செல்வதற்காக டிக்கெட் எடுக்க கவுண்டருக்குச் சென்ற போது, அங்கு ஒரு நபர் தன்னை டிக்கெட் பரிசோதகர் என அறிமுகப்படுத்தி, பீகார் செல்வதற்கு டிக்கெட் ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளார்.
அந்த நபரின் கூற்றின் மீது நம்பிக்கை வைத்த ஷாதர் அலாம், அவரிடம் 900 ரூபாய் பணம் கொடுத்துள்ளார். மேலும், இரவு 10.45 மணிக்கு பீகார் மாநிலத்திற்குச் செல்லும் ரப்திசாகர் விரைவு ரயிலில் ஏற்றி விடுவதாக அழைத்துச் சென்று, பின்னர் அங்கிருந்து தலைமறைவாகியதாகக் கூறப்படுகிறது.
அதன் பின்னர், ஊருக்குச் செல்ல பணம் இல்லாமல் செய்வதறியாமல் திகைத்து நின்ற ஷாதர் அலாம், தன்னை ஏமாற்றி பணம் பெற்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி சென்ட்ரல் ரயில் நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.