கரூர்:கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோன்றிமலை, சுங்ககேட் அருகில் தனியார் (ராயல் கோச்) பேருந்து பாடி கட்டும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பாடி கட்டும் நிறுவனத்தில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், புதிதாக பேருந்து பாடி கட்டி முடிக்கப்பட்ட பேருந்தின் இறுதிக்கட்ட பணிகள் நேற்று (நவம்பர் 14) மாலை 6 மணியளவில் நடைபெற்றுக் கொண்டிருந்துள்ளது. வெல்டிங் பணி செய்து கொண்டிருந்தபோது, தீப்பொறி பட்டு, திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனைக் கண்டு, பேருந்தில் வேலை பார்த்த அனைவரும் அவசரமாக வெளியேறியுள்ளனர்.
ஆனால், பேருந்தின் உள்ளே கதவு பூட்டப்பட்டிருந்ததால், கரூர் செல்லாண்டிபட்டி கிராமத்தை அடுத்த குமாரபாளையத்தைச் சேர்ந்த வெல்டர் ரவிச்சந்திரன்(42) மட்டும் உள்ளே சிக்கிக் கொண்டுள்ளார். அப்போது தீ மளமளவெனப் பற்றி பேருந்து முழுவதும் எரிந்துள்ளது. பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரூர் தீயணைப்புத்துறையினர் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதையும் படிங்க:ஆம்பூரில் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு..உறவினர்கள் சாலை மறியல்!
அதனைத் தொடர்ந்து பேருந்தின் கதவைத் திறந்து பார்த்த போது, பேருந்து கதவின் அருகே தொழிலாளி ரவிச்சந்திரன் கருகிய நிலையில் இருந்துள்ளார். பின்னர், தகவலறிந்து வந்த தாந்தோன்றிமலை போலீசார், தீ விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து நடந்த இடத்திற்குச் சென்ற கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் மற்றும் தான்தோன்றிமலை காவல் உதவி ஆய்வாளர் தில்லைக்கரசி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே அப்பகுதியில் ஏராளமாக மக்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், தனியார் பேருந்து கூடு கட்டும் கட்டும் நிறுவனத்தில் போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளாதது, தீயணைப்பு தடுப்பு பயிற்சி இல்லாதது உள்ளிட்டவை தீ விபத்தில் உயிரிழப்புக்குக் காரணமாக கூறப்படுவதால், தொழிலாளர் நலத்துறை ஆணையர் துணை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்