திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்துக்கு உட்பட்ட நேதாஜி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆலியப்பா(66). இவர் பிரபல பீடி கம்பெனியில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில், ஆலியப்பா கடந்த 30 ஆண்டுகளாகச் சேமித்த சேமிப்பை வைத்து, அதே பகுதியில் அவருடைய மனைவி நாகூரம்மாள் பெயரில் வீடு ஒன்றைக் கட்டுயுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, கட்டி முடிக்கப்பட்ட வீட்டிற்குக் குடிநீர் இணைப்பு வேண்டி, உரிய ஆவணங்களுடன் திருநெல்வேலி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களைக் கூறி, தொடர்ந்து அலைக்கழித்து இணைப்பு கொடுக்காமல் இருந்துள்ளனர். மேலும் கூடுதல் கட்டணமும் வசூலித்துள்ளனர்.
ஆகையால் இதுதொடர்பாக, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதை விசாரித்த நடுவர் குழு உடனடியாக இணைப்பு வழங்க வேண்டும் எனவும், கூடுதலாக வசூல் செய்த பணத்தைத் திருப்பி வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இருப்பினும், உத்தரவை அமல்படுத்த விடாமல், மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த் 50வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரசூல் மைதீன் இடையூறு செய்து வருவதாகவும், தனிப்பட்ட முறையில் அவருக்குப் பணம் செலுத்த வேண்டும் என நிர்ப்பந்தம் செய்வதாகவும், பணம் கொடுக்க விருப்பம் இல்லாததால் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வருவதாகவும் பாதிக்கப்பட்ட ஆலியப்பா மாநகராட்சியில் புகார் அளித்துள்ளார்.