சென்னை:சென்னை போரூர் கார்டன் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர், சத்தியசீலன். இவர் கடந்த 11 ஆண்டுகளாக 2 நாய்களை வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் வீட்டின் எதிரில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணியில் பணிபுரிந்து வரும் நபர் ஒருவர், நேற்று மதுபோதையில் சத்தியசீலன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் நுழைய முயன்றுள்ளார்.
அப்போது, சத்தியசீலனின் நாய் அவரைப் பார்த்து குரைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நபர், தனது கையில் இருந்த இரும்பு ராடால் நாயை கொடூரமாக குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து நாய் உயிரிழந்தது. நாயின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் நாய் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், நாயைக் கொன்ற நபரை அடித்து தாக்கியுள்ளனர்.
பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக மதுரவாயல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் காவல்துறையினர், நாயைக் கொலை செய்த நபரை மீட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததுடன், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.